வீடு கட்டிப்பார், கல்யாணம் செஞ்சு பாருன்னு ஒரு பழமொழி இருக்கு, இரண்டுமே கடினம் என்பர், ஆனால் தற்போது இருக்கும் சூழலில் ஊரடங்கை காரணம் காட்டி, கூட்டம் கூட்டாமல் கோவிலில் சிம்பிளா  கல்யாணம் கூட செஞ்சிடலாம் போல, வீடு கட்ட முடியாதுனு சொந்த  வீடு கட்டும் கனவில் இருக்கும் குறிப்பாக நடுத்தர குடும்பத்தினரின்  வீடு கட்டும் கனவு கனவாக மட்டுமே இருக்கும் என்று கலங்குகின்றனர். 



காரணம் இரு மாநில எல்லையோர பகுதிகள் என்பதாலும் இயற்கை எழில்மிகு பகுதி என்பதாலும் தேனி மாவட்ட எல்லையோர பகுதிகளில் வீட்டடி மனைகள்  கடந்த ஓராண்டுக்குள்  விலை பல மடங்கு கடுமையான ஏற்றம் கண்டுள்ளது. விலை அதிகமாக இருந்த சூழலிலும் வீட்டடி மனைகள் வாங்கியவர்கள் தற்போது அதில் வீடு கட்டும் பணியை நினைத்து திணறி வருகின்றனர். கட்டுமானப் பொருட்கள் கடுமையான விலை ஏற்றத்தால் கண் கலங்கி நிற்கின்றனர் . தமிழக ,கேரள எல்லை மாவட்டமான தேனி மாவட்டம் உள்ளது.


தமிழகத்திலிருந்து குறிப்பாக தேனி மாவட்டத்திலிருந்து டிப்பர் லாரிகள் மூலம் கேரள மாநிலத்திற்கு கட்டுமானப் பொருட்களான ஜல்லி, செங்கற்கள், எம்சாண்ட் என ஏற்றுமதி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசலின் விலையேற்றம் ஆட்கள் பற்றாக்குறை மேலும் கட்டுமான பொருட்களின் விலைகள் கடுமையாக ஏற்றம்  ஊரடங்கு விதிமுறைகளால்  இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து இல்லாத நிலையால்  ஏற்றுமதி தற்போது முற்றிலும் குறைந்துள்ளது.



இரு மாநில எல்லைப்பகுதியான தேனி மாவட்டத்தில் உள்ளூரிலேயே கட்டுமான பணிகள் நடைபெறாமல் வெகுவாக குறைந்துள்ளது. கட்டுமான பொருட்களான செங்கற்கள் கடந்த 2019 முதல் 2020-ஆம் ஆண்டு வரை ஒரு கல் 3.50 ரூபாய் முதல் 4.50 ரூபாயாக இருந்தது, தற்போது 2020 முதல் 2021 ஆம் ஆண்டு 6.50 ருபாய் முதல் 7 ருபாய் வரையில் செங்கற்கள் கடுமையாக விலையேற்றம் கண்டுள்ளது. அதேபோல ஜல்லி கற்கள் ஒரு யூனிட் லோடு 2019 முதல் 2020 ஆம் ஆண்டு வரை 2000 ரூபாயாக இருந்தது தற்போது 4000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இப்படி கட்டுமான பொருட்களுக்கு தேவையான ஒவ்வொரு பொருட்களிலிருந்து கடுமையான விலை ஏற்றம் கண்டுள்ளது. விலையேற்றத்திற்கு முன்பு எடுத்துக்காட்டாக ஒரு வீடு கட்ட ஐந்து லட்சம் ரூபாய்க்கு முடிக்கப்படவேண்டிய வீடு தற்போது ஒரு மடங்கு கூடிய நிலையில் 10 லட்ச ரூபாய் இருந்தால்தான் வீடு கட்டி முடிக்கமுடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக கவலை அடைந்துள்ளனர். இனி வரும் காலங்களில் சொந்த வீடு கட்டுவது கனவாக மட்டுமே இருக்குமோ என்ற அச்சத்தில் பல தரப்பினர் கவலை அடைந்துள்ளனர்.