கோடைக்கால வெயில் மற்றும் வெப்ப அலை தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடித்து,  ஆரோக்கியமாக வாழ்ந்திடல் வேண்டும் - மாவட்ட  ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.

கோடைக்கால வெயில்
    
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கோடைக்கால வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடித்திடல் வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தினசரி தட்பவெப்ப நிலவரங்களை ரேடியோ, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொள்ளவேண்டும். உடலின் நீர்ச்சத்தை பாதுகாக்க போதுமான அளவு பாதுகாக்கப்பட்ட குடிநீர் பருக வேண்டும். இளநீர், ராகி கஞ்சி, நீர்மோர் போன்ற வீடுகளில் எளிதில் தயாரிக்கக்கூடிய திரவ உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக உப்பு மற்றும் எண்ணெய் உணவுகள், குளிர்பானங்கள் மற்றும் மதுபானங்களை தவிர்க்க வேண்டும்.  வெயில் காலங்களில் உடலின் நீர்ச்சத்தை பாதுகாக்க உப்புக் கரைசல் (ORS) பருகுவது நல்லது. அரசின் வழிகாட்டுதலின்படி, சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட 20 இடங்களில் உப்புநீர் கரைசல் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
இணை நோயாளிகளுக்கு வெயில் காலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 
 
மேலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ORS  மற்றும் உப்புநீர் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. வெப்ப பாதிப்பால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 2 படுக்கை வசதிகள், அரசு மருத்துவமனைகளில் 5 படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 10 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது தளர்வான, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணியவும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கடினமான உடற்பயிற்சி அல்லது வெளிப்புற வேலைகளைத் தவிர்க்கவும். குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இணை நோயாளிகளுக்கு வெயில் காலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 
 
வெப்பம் மற்றும் வெப்ப அலை தடுப்பு
 
உடலில் சோர்வு, அதிக வியர்வை, தலைவலி, மயக்கம், படபடப்பு, தோல் சிவத்தல் அல்லது வறட்சி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளை நிழலில் வைத்திருந்து அவற்றிற்கு போதுமான குடிநீர் வழங்க வேண்டும். 
மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது வெப்ப பாதிப்பு அறிகுறிகளுடன் யாரேனும் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். சம்பந்தப்பட்ட தகவல்களை சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள் அல்லது அரசு மருத்துவ அலுவலர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். தற்போதைய காலநிலையில் மேற்கண்ட கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் ஆரோக்கியத்தினை கடைபிடிக்க வேண்டும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.