கேரளாவில் அணைகள், ஆறுகளில் படகு சவாரிகளை அதிகப்படுத்தி சுற்றுலாத்துறை மூலம் வருமானம் ஈட்டுகிறது. தமிழகத்தில் நீர்வளத்துறையின் கீழ் உள்ள அணை, ஆறுகளில் படகு சவாரியை மேம்படுத்த த.வெ.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

படகு சவாரி, நீர் விளையாட்டுகளின் சொர்க்கபூமியாக கேரளா உள்ளது. ஆறு, கடலில் இருந்து பிரிந்த 'பேக் வாட்டர்' படகு சவாரிக்கு ஏற்ற இடமாக உள்ளது. துடுப்பு படகு, ஷிகாரா படகு, படகு வீடுகள் இருப்பதால் அப்பகுதி மக்களின் முக்கிய வருவாயாக உள்ளது. ஆறுகளை கடந்து செல்லும் போது எந்த இடத்திலும் பாலிதீன் குப்பை, பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதப்பதை பார்க்க முடியாது. ஆற்றின் தன்மை என்ன, ஒரே நேரத்தில் எத்தனை படகுகளை இயக்க வேண்டும், தண்ணீரின் சுழற்சி உட்பட அனைத்தையும் துல்லியமாக கணக்கிட்டு படகுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

வருவாயை பெருக்கும்அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கும் கேரள அரசு முக்கியத்துவம் தருகிறது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ராமநாதபுரத்தில் நீர் விளையாட்டுக்கு சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் தமிழக அரசின் சார்பில் முன்பு படகு சவாரி விடப்பட்டது. வைகை அணை கட்டப்பட்டு 65 ஆண்டுகளாகியும் இதுவரை படகு சவாரி விடவில்லை. ஆண்டில் பெரும்பாலான மாதங்கள் அணையில் நீர் நிறைந்திருக்கும் என்பதால் தண்ணீர் பிரச்னையில்லை.

எனவே நீர்வளத்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறைகள் இணைந்து படகு சவாரி விடுவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் கேரளாவில் மலம்புழா அணையில் 60 அடி உயரத்தில் 'ரோப் கார்' செயல்படுத்துவதை போல இங்கும் திட்டமிடலாம். வைகை அணையின் அருகிலேயே பூங்கா இருப்பதால், உயரத்தில் இருப்பதற்கு இயற்கை காட்சிகள் அழகாக இருக்கும்.அருவி குளியல், படகு சவாரி, நீர் விளையாட்டுகளின் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டு தற்போதைய தமிழக த.வெ.க., அரசு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.