கடந்த  13-ம் தேதி இரவு 8:30 மணிக்கு நகராட்சிகளின் நிர்வாக கமிஷனர் பொன்னையா தலைமையில் அனைத்து நகராட்சி கமிஷனர்களுக்கும் வீடியோ கான்பிரன்சிங் முறையில் ஆய்வு கூட்டம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இதில் சிவகங்கை நகராட்சி ஆணையாளர் உட்பட பல்வேறு நகராட்சி கமிஷனர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.



 

அப்போது சிவகங்கை நகராட்சி வளர்ச்சி பணிகள், டெண்டர் விட்டதில் உள்ள பிரச்னைகள் குறித்து பொன்னையா, சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியனை, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பொன்னையா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.  இன்ஜினியர் பாண்டீஸ்வரி, கமிஷனராக கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில். சிவகங்கை நகராட்சி ஆணையராக இருந்த பாலசுப்ரமணியன் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இது குறித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியனை தொடர்பு கொண்டு பேசினோம், “வீடியோ காண்பிரசில் பேசிக் கொண்டிருக்கும்போது சில ஆவணங்கள் தொடர்பாக கேட்டார். அப்போது நான் ஆவணங்கள் டேபிளுக்கு வரவில்லை வந்ததும் அது தொடர்பாக தகவல் தருகிறேன் என கூறினேன். அதற்கு என்னை ஒருமையில் தரக்குறைவாக பேசினார். ”முட்டாள் இது கூட தெரியாதா? உன்னை சஸ்பெண்ட் செய்துவிடுவேன்.” என பதிலளித்தார். ”சார் ஒருமையில் பேசவேண்டாம்” என கூறினேன். ஆனாலும் அவர் தொடர்ந்து பேசினார். உன்னை சஸ்பெண்ட் செய்துவிடுவேன்" எனவும் மிரட்டினார். நானும் செய்துகொள்ளுங்கள் என சொல்லிவிட்டேன்.



சொன்ன 10-வது நிமிடத்தில் என்னை சஸ்பெண்ட் செய்துவிட்டார். இது குறித்து உறவினர்கள் மற்றும் சில நண்பர்கள் போனில் தொடர்புகொண்டு கேட்டது மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டது. அதனால் உடல்நலக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தற்போது உடல்நலனில் முன்னேற்றம் உள்ளது" என்று முடித்துக்கொண்டார்.

 

சஸ்பெண்ட் செய்யப்பட்ட நகராட்சி ஆணையருக்கும், நிர்வாக கமிஷனர் பொன்னையனுக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் சொல்லும் சொந்த வேலைகள் சிலவற்றையும் சாதகமாக செய்து கொடுக்காததும் ஒரு காரணம் என சிவகங்கை நகராட்சி சுற்றுவட்டாரங்கள், புகார் வாசிக்கப்படுகிறது. இதைக் குறித்து ஊடகங்கள் கவனம் செலுத்தவேண்டும் எனவும் நகராட்சி வட்டாரத்தினர் கேட்டுக்கொண்டனர்.