முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மரங்களை வெட்டுவதற்கு மத்திய மற்றும் கேரள அரசுகள் 4 வாரங்களில் அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக, கேரளா எல்லையை இணைக்கும் ஒரு முக்கிய மாவட்டமாக பார்க்கப்படுவதும் தேனி மாவட்டம். தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குவது விவசாயம். இப்பகுதியில் நெல், தென்னை, திராட்சை, வாழை உள்ளிட்ட பயிர்களின் விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறிகளின் உற்பத்தியும் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தொடர்ந்து பல்வேறு முரணான கருத்துக்களையும்,எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள், தனிநபர்கள் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணையில் உள்ளன. இந்நிலையில், மழைக்காலம் தொடங்கும் முன் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்தது.  அந்த மனுவில், அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு பணியாளர்கள் சென்று வர அனுமதிப்பது, படகுகள் செல்வது, சாலை அமைப்பது, மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, நீதிபதிகள், "பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் முன்னேற்றம் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கேரள அரசு தரப்பு வழக்கறிஞர், 'வல்லக்கடவு சாலையை சீரமைக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசு உரிய முறையில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லை' என்று கூறினார்.  அப்போது தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், 'மரங்களை வெட்ட கேரள அரசு முன்பு அனுமதி அளித்தது. ஆனால், தற்போது மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோர வேண்டும் என கூறுகிறது. அதற்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், 'தமிழ்நாடு அரசின் மனுவை பரிசீலித்து வருகிறோம். விரைந்து முடிவெடுக்க வேண்டும்' என்று கூறினார். 

இதையடுத்து, நீதிபதிகள், 'அணை பராமரிப்புக்கு மரங்களை வெட்ட அனுமதி வழங்க கேரளாவுக்கும், மத்திய அரசுக்கும் கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்று தெரிவித்தனர். மேலும், 'மராமத்து பணிகளை நடத்த ஏதுவாக வல்லக்கடவு சாலையை கேரள அரசே ஏன் சீரமைக்கக் கூடாது? பணியாளர்கள் செல்ல 2-வது படகு ஒன்றை தமிழ்நாடு அரசுக்கு கேரளா அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினர்.  அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், 'சாலையை கேரள அரசு சீரமைத்தால், அதற்கான செலவை ஏற்கிறோம்' என்று கூறினார். இதையடுத்து, நீதிபதிகள், 'மரங்களை வெட்ட 4 வாரத்தில் அனுமதி வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கேரள அரசே வல்லகடவு சாலையை சீரமைக்க வேண்டும். படகு ஒன்றையும் தமிழ்நாடு அரசுக்கு கொடுக்க வேண்டும். எஞ்சிய பிரச்னைகள் குறித்து முடிவு செய்ய அணையின் மேற்பார்வைக்குழு உடனடியாக கூடி 4 வாரத்தில் முடிவுகள் எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.