நெருங்கும் கோடைக்காலம்! இளநீர் கொள்முதலுக்கு போட்டா போட்டி போடும் வியாபாரிகள்
கோடையில் உடலில் போதுமான அளவுக்கு நீர்ச்சத்து இருக்குமாறு வைத்திருப்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைக்கும் உணவுகளை சாப்பிடுவது அவசியமானது. நமது உடல் வியர்வையின் மூலம் தொடர்ந்து உடலிலுள்ள நீரை இழக்கிறது. அதோடு, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லையெனில் உடல் வறட்சி ஏற்படும். கோடையில் உடலில் போதுமான அளவுக்கு நீர்ச்சத்து இருக்குமாறு வைத்திருப்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருச்சி, வேலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மேலும் வெயிலின் தாக்கத்தை தனிப்பதற்காக இளநீர், மோர், நுங்கு போன்ற உடலின் வெப்பநிலையை தனிக்கும் பொருட்களை அதிக அளவில் உட்கொண்டு வருகிறார்கள் மக்கள். குறிப்பாக இதில் இளநீர், மோர், தர்ப்பூசணி பழம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் பெரிதும் விரும்பக்கூடிய ரசாயன கலப்படமற்ற இயற்கையான உணவு பொருட்களுக்குதான் மவுசு கூடிவருகிறது. இதில் சீசன் ஏதுமின்றி ஆண்டுதோறும் பரவலாக இளநீர் விற்கப்படும் நிலையில், சீசனுக்கு முன்பாகவே தர்பூசணியும், வெள்ளரிப்பிஞ்சும், வெள்ளரிப் பழங்களும் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக குவிக்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, திராட்சை சாகுபடிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது குளிர் கால சீசன் முடிந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக அடுத்து வரும் கோடை கால சூழலை சமாளிக்க பழங்கள் உட்பட உடலின் சூட்டை தனிக்கும் உணவுப்பொருட்கள் கொள்முதல் செய்வதிலும் விற்பனையிலும் கிராக்கி ஏற்படும். அந்த வகையில் கோடை வெயிலுக்கு இதமாக தாகத்தை தீர்க்க உதவும் தர்பூசணி, இளநீர் உள்ளிட்டவைகளை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகளிடம் தற்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சோழவந்தான் ஜல்லிக்கட்டு.. 1030 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்பு.. விறு விறு ஜல்லிக்கட்டு
இந்நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளைகின்ற இளநீர் டெல்லி, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் வியாபாரிகள் ஏற்றுமதி செய்கின்றனர். இங்கு விளையும் இளநீர் மிகவும் சுவையாக இருப்பதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி இளநீருக்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு இளநீரை கொள்முதல் செய்கின்றனர். கடந்த மாதம் பச்சை இளநீரை ரூ,15-க்கும், செவ்விளநீரை ரூ.18-க்கும் கொள்முதல் செய்தனர். தற்போது பச்சை இளநீர் ஒன்றை ரூ.18-க்கும், செவ்விளநீர் ஒன்றை ரூ.21-க்கும் என்று மொத்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், "தற்போது கோடை காலம் நெறுங்கி உள்ள நிலையில் அதற்கு முன்பே ஏற்றுமதியாகும் இளநீருக்கு நல்ல விலை கிடைக்கிறது. இதனால் இங்கு விலையும் இளநீர்களை லாரிகள் மூலம் மும்பை மற்றும் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறோம். இளநீர் கொள்முதல் செய்வது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இளநீருக்கு திடீரென்று கிராக்கி ஏற்பட்டுள்ளது. மேலும் கோடை காலம் தொடங்கி முடியும் வரை இளநீருக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றனர்.