கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 11-ம் வகுப்பு மாணவன் தேர்வில் தோல்வியுற்றதால் ரயிலில் பாய்ந்து  தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதில் 92.09% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 95.13% ஆகவும், மாணவர்கள் 88.70% ஆகவும் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 86.38% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 59 அரசுப் பள்ளிகளில் பயிலும் 4,681 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 83.93 சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த தர்மபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்சி டிரைவர் சூரிய நாராயணன்- புஸ்பலதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இதில் இளைய மகன் யோகபாபு(17) என்பவர் அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு வணிகவியல் பிரிவில் படித்து வந்தார், இந்நிலையில் நேற்று வெளியான 11-ம் வகுப்பு தேர்வு முடிவில் யோகபாபு 251/500 மதிப்பெண்கள் எடுத்தும் வணிகவியல் பாடத்தில் மட்டும் 22/100 மதிப்பெண்கள் எடுத்து தோல்வியுற்றார்,

இதனால் விரக்தி அடைந்து மனம் உடைந்து காணப்பட்ட யோகபாபு   கொடைரோடு அருகே திண்டுக்கலில் இருந்து மதுரை மார்க்கமாக சென்ற தேஜஸ் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடைரோடு இருப்பு பாதை காவல் துறை சார்பு ஆய்வாளர் அருணோதயம் யோகபாபுவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்கு பதிவு செய்து தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியுற்ற அரசு பள்ளி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)