ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை 'கீ' கொடுக்க வேண்டும். காலை முதல் மதியம் வரை 'டெல்லி', மதியம் முதல் மாலை வரை 'ஹிந்தி', மாலைக்குப் பிறகு 'மத்திய அரசு வஞ்சிக்குது' - இதையேதான் அவர் பேசிக் கொண்டிருக்கிறார் - பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம். திமுக தலைவர்களுக்கு வாய் இல்லையென்றால் நாய் தூக்கிச் சென்றும், கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றவில்லை எனக் கிண்டல் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி தமாகா வேட்பாளர் விடியல் சேகரை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் திமுக அரசு மற்றும் அமைச்சர் சக்கரபாணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "1996-க்குப் பிறகு ஒட்டன்சத்திரத்தில் ஒரு விடியல் வரவேண்டும் என்பதற்காக விடியல் சேகர் அண்ணன் இங்கே வந்திருக்கிறார். 30 ஆண்டு காலமாக ஒரே சட்டமன்ற உறுப்பினர் இங்கே இருக்கிறார். ஒரு மனிதன் தன்னுடைய இரண்டு தலைமுறையை ஒருவருக்கே கொடுத்திருக்கிறான். ஆனால், 30 ஆண்டுகளில் ஒட்டன்சத்திரத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? விவசாய மக்கள் இன்னும் கஷ்டத்தில்தான் இருக்கிறார்கள். ஒட்டன்சத்திரத்தை இன்னும் வறட்சிப் பகுதியாகத்தான் அமைச்சர் சக்கரபாணி வைத்திருக்கிறார்" எனக்கூறினார் வேட்பாளர் விடியல் சேகரின் தகுதிகள் குறித்துப் பேசுகையில், "2006 முதல் 2011 வரை காங்கேயம் எம்எல்ஏ-வாக இருந்தபோது, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் 100% வருகைப் பதிவோடு சட்டமன்றத்திற்குச் சென்றவர் இவர். தனது தொகுதிக்காக அதிகக் கேள்விகளைக் கேட்ட முதல் 10 எம்எல்ஏக்களில் விடியல் சேகரும் ஒருவர். ஒரு எளிய விவசாயியின் மகனான அவருக்கு நீங்கள் இந்த முறை வாய்ப்பளிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.ரேஷன் துறை ஊழல்கள் குறித்துப் பேசிய அவர், "பிரதமர் மோடி தமிழகத்திற்கு மாதம் 2 லட்சம் டன் அரிசி அனுப்புகிறார். ஆனால், ரேஷன் கடையிலிருந்து அரிசியைக் கடத்துவதையே இவர்கள் வேலையாக வைத்திருக்கிறார்கள். 2023-ல் மட்டும் 91,000 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு ஊழல் குறித்துப் புகார் அளித்த குப்புசாமி என்பவரின் மகன் தீக்குளித்து இறந்து போனதை மக்கள் மறந்துவிடக் கூடாது" என ஆவேசமாகத் தெரிவித்தார்.