பழனி கோவிலில் முதல்வர் விஜய்க்காக சிறப்பு அர்ச்சனை; அமைச்சர் ரமேஷ் பங்கேற்பு
மூலவர் சன்னதியில் தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தைக் கூறி அர்ச்சனை செய்து அமைச்சர் வழிபட்டார்.

பழனி முருகன் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கட்டண மற்றும் சிறப்பு தரிசன வழிகளைப் பயன்படுத்தாமல், பொது தரிசன வரிசையில் மக்களோடு மக்களாகக் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டார். மேலும், கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்ய முக்கியத்துவம் தர வேண்டும் என அர்ச்சகர்களுக்கு அறிவுறுத்தியதோடு, அன்னதான வரிசையில் நின்று பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்குச் சென்ற அமைச்சர் ரமேஷ், அங்கு தனக்கான சிறப்புப் பாதைகளைப் புறக்கணித்துப் பொது தரிசன வழியிலேயே சென்றார். தொடர்ந்து அவருக்குத் திருக்கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்ட போது, வேத மந்திரங்கள் முழங்கின. அப்போது அங்கிருந்த அர்ச்சகர்களிடம், திருக்கோவில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு முதன்மை முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ரமேஷ் நேரடியாக அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து ஓதுவார்கள் மூலம் திருமுறைப் பாடல்கள் பாடப்பட்டன. பின்னர், மூலவர் சன்னதியில் தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தைக் கூறி அர்ச்சனை செய்து அமைச்சர் வழிபட்டார்.

இதனைத் தொடர்ந்து போகர் சன்னதி, கைலாசநாதர் சன்னதி மற்றும் தங்கக் கோபுர வழிபாடுகளை முடித்துக் கொண்ட அமைச்சர், நேராக அன்னதானக் கூடத்திற்குச் சென்றார். அங்கேயும் தனியாக அமராமல், பொதுமக்களோடு பொதுமக்களாக அன்னதான டோக்கன் வரிசையில் நின்று உணவு வாங்கி பக்தர்களுடன் தரையில் அமர்ந்து உணவருந்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் முறையைப் பின்பற்றினால் மட்டுமே நிர்வாகத்தின் குறை, நிறைகளைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும்" என்றார். பின்னர், அன்னதானச் சமையற்கூடத்திற்குள் சென்று உணவுகள் தூய்மையாகத் தயாரிக்கப்படுகிறதா எனப் பார்வையிட்ட அமைச்சர் ரமேஷ், மீண்டும் ரோப்கார் வழியாகவே மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்கினார்.

மேலும் கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெருந்திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக, ரூ.53.79 லட்சம் மதிப்பில் கொடைக்கானல் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலங்கார நுழைவாயில் கோபுரத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து, கிரிவீதியில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் 80 சென்ட் பரப்பளவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராக்கால நந்தவனம் பூங்காவையும் அமைச்சர் திறந்து வைத்தார். பழனி மின் இழுவை ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன காத்திருப்பு கூடப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
Before You Go
TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
ட்ரெண்டிங் செய்திகள்






















