மதுரை மாவட்டம் மேலூர் தும்பைப்பட்டி அருகே ஆண்டிகோயில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 40) கால்நடை மேய்த்துகொண்டும் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி செல்வி மற்றும் குடும்பத்தினர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இங்குள்ள இளமுனி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கின்றது. இந்த மறுகால் தண்ணீரில் பானை வைத்து கெண்டை மீன்களை இப்பகுதியில் பிடித்து உண்பது வழக்கம். இதனை "பானைப் பொறி" என அழைக்கின்றனர்.
பானைப் பொறி மூலம் மீன்பிடித்த கருப்பசாமிக்கும் அதே ஊரை சேர்ந்த மழுவேந்தி மற்றும் ராஜதுரைக்கும் தகராறு ஏற்பட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நள்ளிரவு வீட்டின் வெளியே உறங்கி கொண்டிருந்த கருப்பசாமி மற்றும் அவரது மனைவி செல்வி ஆகிய இருவரையும் உடலில் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
கொலை செய்தது மழுவேந்தி மற்றும் ராஜதுரை தான் என உயிரிழந்த கருப்பசாமியின் குடும்பத்தினர் திருப்பத்தூர் சாலையில் உள்ள கீழவளவு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விரைந்து வந்த கீழவளவு போலீசார் இருவரது சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை துவக்கினர்.
இதுகுறித்து கீழவளவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்ட எஸ்.பி சிவபிரசாத், மேலூர் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி, இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் மூலம் சோதனை நடந்தது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இந்த இரட்டைக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த கீழவளவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ராஜதுரை மற்றும் மழுவேந்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்