சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சகோதரர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

பூவந்தி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவளித்த வழக்கில் சகோதரர்களுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகேவுள்ள கிழக்குளம் மடப்புரம் காலனியை சேர்ந்தவர்கள் துரைப்பாண்டி, சின்னப்பாண்டி சகோதரர்கள். இவர்கள் இருவரும் கேபிள் பணியாளராக இருந்துவரும் நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதி வீடு ஒன்றிற்கு கேபிள் வயர் சரிசெய்ய சென்றபோது அங்கிருந்த 14 வயது சிறுமிக்கு இருவரும் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
தலா 5 ஆண்டு சிறை தண்டனை
இந்நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பூவந்தி காவல் நிலையத்தில் புகாரளிக்கவே அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சகோதரர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கானது சிவகங்கை ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சகோதரர்கள் இருவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், தீர்ப்பளித்த நீதிபதி கோகுல் முருகன் குற்றவாளிகள் இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், தலா ரூ2 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.





















