சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டேன். கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுக வேட்பாளரை விட 34 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தேன். திடீரென, வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் புகுந்த அதிமுகவினர் தேர்தல் அதிகாரிகளை மிரட்டி அதிமுக வேட்பாளர் 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.


இதனால், மறுவாக்கு எண்ணிக்கை கோரிய எனது மனு தேர்தல் தீர்ப்பாயத்தால் நிராகரிக்கப்பட்டது. எனவே, எனது கோரிக்கையை நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஆனந்தி, வழக்கறிஞர் மோகன் குமார் வழக்கறிஞராக கமிஷனராக நீயமிக்கப்படுகிறார். அவர் முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். இதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 11ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.


 




அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுபவர்கள் நேர்மை மற்றும் நன்னயத்துடன் இருப்பது அவசியம்- மதுரை கிளை


தேனியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பெரியகுளம் உரிமையியல் நீதிமன்றத்தில் ஆரிப் ரகுமான் என்பவரை அரசு வழக்கறிஞராக நியமனம் செய்ததை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம்.சுப்ரமணியம், உத்தரவில்,"இது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளரின் விசாரணை அறிக்கையில், ஆரிப் ரகுமான் மீது பதியப்பட்ட வழக்குகளில் பல வழக்குகள், தவறுதலாக பதியப்பட்டவை என்றும், சில வழக்குகள் முன்விரோதம் காரணமாக பதியப்பட்டவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


பொதுவாக அரசு வழக்கறிஞர் நியமனத்தின் போது அவர்களின் நடத்தை, தகுதி, கல்வித்தரம், அப்பதவிக்கு பொருத்தமானவரா? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுபவர்கள் நேர்மை மற்றும் நன்னயத்துடன் இருப்பது அவசியம். ஆகவே அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுபவர்களின் அனுபவம், நடத்தை, ஒழுக்கம், தகுதி போன்றவை குறித்து முறையாக விசாரிக்கப்பட்ட பின்னரே பணியமர்த்த வேண்டும். ஆகவே பெரியகுளம் உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக ஆரிப் ரகுமானை நியமித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.