திருப்புவனம் அருகில் வைகை ஆற்றங்கரை பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் தொடர்பான 6 நகல் மனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல் வெளியிட்டுள்ளார்.
வைகை ஆற்றில் கிடந்த உங்களுடன் ஸ்டாலின் மனு
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் வைகை ஆற்று பாலத்தின் கீழ் கொட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், பூவந்தி, கீழடி, மடப்புரம், ஏனாதி நெல் முடிக்கரை இந்த கிராமங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கடந்த 21 மற்றும் 22 ஆம் தேதி கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்களை திருப்புவனம் வைகை ஆற்று பாலத்திற்கு கீழ் கொட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல் வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகில் வைகை ஆற்றங்கரை பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் தொடர்பான மனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனடிப்படையில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம் தொடர்பாக அப்பகுதியில் பெறப்பட்ட மனுக்களில் பட்டா மாறுதல் வேண்டி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது, உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்ட 6 மனுக்களின் நகல்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக பெறப்பட்ட 7 மனுக்களின் நகல்கள் ஆகியவைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மனுக்களின் நகல்கள் வெளிவந்தது தொடர்பாக கடந்த இரண்டு தினங்கள் திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர்களிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடவடிக்கை எடுக்கப்படும்
இவை தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. அரசிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இதுபோன்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளோர் மீது, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, அவர்கள் தெரிவித்துள்ளார்.