மேலும் அறிய
Sivaganga- இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்: திறக்கப்பட்ட வீடுகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.. கண்ணீருடன் அகதிகள் !
திறந்து வைக்கப்பட்ட இந்த வீடுகள், 10 நாளாகியும் பயன்பாட்டிற்கு வராதது வருத்தம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கை அகதிகளுக்கு - வீடு
Source : whatsapp
மானாமதுரை அருகே இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் அதிருப்தி – “இறந்தால்தான் வீடு கிடைக்குமா?” எனக் குமுறும் தமிழர்கள்.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மூங்கில் ஊரணி பகுதியில் செயல்பட்டு வரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதியதாக கட்டப்பட்ட குடியிருப்பு வீடுகள் இன்னும் பயன்பாட்டிற்கு வழங்கப்படாததால் அகதிகள் கடும் அதிருப்தி மற்றும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த முகாமில் வசிக்கும் மக்களுக்காக ரூ.11.29 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 196 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 31ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் வீடுகளை திறந்து வைத்தார். பொதுவாக முழுமையான பணிகள் நிறைவடைந்த பின்னரே திறப்பு விழா நடைபெறும் என்ற நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் முழுமையாக தயார் செய்யப்படாமல் திறந்து வைக்கப்பட்டதாக முகாமில் உள்ளோர் குற்றம் சாட்டுகின்றனர்.
பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்
வீடுகள் அமைந்துள்ள பகுதியில் சாலை அமைக்கும் பணிகளின்போது கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் கழிவறை தொட்டிகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்டப்பட்டுள்ள சில வீடுகளில் தரைதளத்தில் பதிக்கப்பட்ட டைல்ஸ்கள் உடைந்த நிலையில் காணப்படுவதாகவும், கழிவறை சுவர்கள் முறிந்து இருப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. குழாய்களில் தண்ணீர் வராததால் குடிநீர் வசதியும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என முகாமில் உள்ளோர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்ட பின்னரே பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என கூறியதாக முகாமில் உள்ளோர் குற்றம் சாட்டினர்.
கண்ணீர் மல்க அவர்கள் கேள்வி எழுப்பினர்
“தமிழ்நாட்டை நம்பியே இலங்கையை விட்டு வெளியேறி இங்கு வந்தோம். அரசு பல நலத்திட்டங்களை அறிவித்தாலும் அவை நடைமுறைக்கு வரவில்லை. பல ஆண்டுகளாக நிரந்தர வீடுகளுக்காக காத்திருக்கிறோம். இறந்தால்தான் எங்களுக்கு வீடு கிடைக்குமா?” என்று கண்ணீர் மல்க அவர்கள் கேள்வி எழுப்பினர்.
தற்போது பல குடும்பங்கள் வாடகை வீடுகளில் தங்கியுள்ளதால் அதிக வாடகையை செலுத்த முடியாமல் பொருளாதார சிக்கலில் தவித்து வருவதாகவும், சிலர் உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்வாதாரம் கிடைக்க உடனடியாக வீடுகளை ஒப்படைத்து, தண்ணீர், கழிவுநீர் வடிகால், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் சரிசெய்து வழங்க வேண்டும் என இலங்கை தமிழர்கள் அரசிடம் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனவரி 31ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட இந்த வீடுகள் 10-வது நாளாகியும் பயன்பாட்டிற்கு வராதது குறித்து சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி, பணிகளை விரைவுபடுத்தி மக்களுக்கு ஒப்படைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























