காய்கறி செடிகளுக்கான நாற்றுக்கள் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கிட திட்டமிடப்பட்டு, அதேபோல், பல்வேறு வகையிலான மரக்கன்றுகளும் இங்கிருந்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் அறிக்கை
 
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை மற்றும் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் செயல்பட்டு வரும் நாற்றாங்கால் பண்ணைகளின் செயல்பாடுகள் மற்றும் மரக்கன்று வகைகள், பழ வகை மற்றும் காய்கறி நாற்றுக்கள் ஆகியவைகளின் பராமரிப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்...,"சிவகங்கை மாவட்டம் விவசாயத் தொழிலை பிரதானமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அதிகளவு பங்களித்து வருகின்றன. விவசாயிகளின் விளைநிலங்கள் பகுதிகளில் தண்ணீர் இருப்பிற்கு ஏற்றவாறு பயிரிட்டு பயன்பெறும் வகையில், விவசாயிகளுக்கு மானியத்திட்டத்தில் சொட்டு நீர் உபகரணங்கள், வேளாண்மைப் பணிக்கான உபகரணங்கள், பண்ணைக்குட்டைகள் என பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதுடன், காலச்சூழ்நிலைக்கு ஏற்றவாறு விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு வகையான பழவகை மரக்கன்றுகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய அரிய வகையிலான உற்பத்தித்திறன் கொண்ட காய்கறி வகை நாற்றுக்கள் தோட்டக்கலைத்துறையின் மூலமாக விவசாயிகளுக்கு மானியத்திட்டத்தில் நேரடியாக வழங்கப்படுகிறது.
 
ரூர்பன் திட்டம்
 
அந்தவகையில் தோட்டக்கலைத்துறையின் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பண்ணை அமைத்து அதன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான மரக்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுக்கள் தேவையான அளவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, சிவகங்கை பகுதியிலுள்ள  மாவட்ட தோட்டக்கலைத்துறை தலைமை அலுவலக வளாகத்தில் 2 ½  ஏக்கர் தேர்வு செய்து, நாற்றங்கால் பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுக்கள் வழங்கும் வகையில், ரூர்பன் திட்டத்தின் மூலம் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதில், தோட்டக்கலைத்துறையின் மூலம் பல்வேறு வகையான பழங்களைச் சேர்ந்த கன்றுகள் நடவு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், காய்கறி செடிகளுக்கான நாற்றுக்கள் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கிட திட்டமிடப்பட்டு, அதேபோல், பல்வேறு வகையிலான மரக்கன்றுகளும் இங்கிருந்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
 
இங்கு அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையின் நோக்கம், அதிகளவு விவசாயப் பெருமக்கள் தலைநகர் பகுதிக்கு அதிகளவு பல்வேறு வேலைப்பணி காரணமாக வந்து செல்லும் போது அவற்றுடன் வேளாண்மைப் பணிக்காக தேவையான கன்றுகளை அரசுப்பண்ணையிலேயே குறைந்த கட்டணத்தில் எடுத்துச் செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது. இப்பண்ணையின் செயல்பாடுகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளின் வகைகள் ஆகியன குறித்து, நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
10 ஆயிரம் மரக்கன்று
 
இதேபோன்று, தேவகோட்டை பகுதியில் கண்டதேவி ஊராட்சிக்குட்பட்ட கீழசெம்பொன்மாரி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 4.91 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் வட்டார நாற்றங்கால் பண்ணையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அங்கு 20 செண்ட் பரப்பளவில் பராமரிக்கப்பட்டு வரும் கொய்யா, பெருநெல்லி, பூவரசு, செம்மரம், மகாக்கனி மற்றும் ரோஸ்வுட் உள்ளிட்ட பல்வேறு வகையான 10,000 எண்ணிக்கையிலான மரக்கன்றுகளின் பராமரிப்பு பணிகள் குறித்தும், நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.   விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் நாற்றாங்கால் பண்ணையினை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, பயன்பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.