தமிழி எழுத்து, அசோகன் பிராமி எழுத்து, தமிழி எழுத்திலிருந்து வட்டெழுத்து தமிழ் எழுத்து வளர்ந்து வந்த நிலை, கல்வெட்டுகளில் எழுத்துகள் ஆகியவற்றை குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார்.

சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி வரலாற்றுத் துறையில் மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
 
சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி, சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக்குழு  இணைந்து  தமிழரின் மரபுகளை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கத்தை நடத்தினர். இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் நளதம்  தலைமை வகித்தார். வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் வெண்ணிலா  வரவேற்புரைத்தார். சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் சிவகங்கை தொல்நடைக் குழுவின் தலைவருமான நா.சுந்தரராஜன், சிவகங்கை தொல்நடைக் குழு செயற்குழு உறுப்பினர் வித்யா கணபதி ஆகியோர் வாழ்த்துரைத்தனர். கருத்தரங்க முதல் அமர்வில் சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர்  மீ. மருதுபாண்டியன், இலக்கியங்களும் கல்வெட்டுகளும் எனும் தலைப்பில் சங்க இலக்கியம், பக்தி இலக்கியங்களில் சுட்டப்படும் நெல் வகைகள் குறித்தும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் நெல் வகை குறித்தும் அகழாய்வுகளில் வெளிப்பட்ட நெல் வகை குறித்தும் உரை நிகழ்த்தினார்.
 
தமிழி எழுத்திலிருந்து வட்டெழுத்து தமிழ் எழுத்து வளர்ந்து வந்த நிலை
 
இரண்டாவது அமர்வில் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி நிலை குறித்து,  தமிழி எழுத்து, அசோகன் பிராமி எழுத்து, தமிழி எழுத்திலிருந்து வட்டெழுத்து தமிழ் எழுத்து வளர்ந்து வந்த நிலை, கல்வெட்டுகளில் எழுத்துகள் ஆகியவற்றை குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி வரலாற்று துறை மாணவிகள் 130க்கு மேற்பட்டோரும் பேராசிரியர்கள் முனைவர் அலமேலு, முனைவர் முனீஸ்வரன் முனைவர் அஸ்வத்தாமன் முனைவர் குமர முருகன், சிவகங்கை தொல்நடைக்குழு செயலர் இரா. நரசிம்மன், இணைச் செயலர் முத்துக்குமரன், தோட்டக்கலைத்துறை மேனாள் உதவி இயக்குனர் பா இளங்கோவன், சோழபுரம் சுத்தானந்த பாரதி பள்ளி மேனாள் தலைமை ஆசிரியர் ஆறுமுகம், சிவகங்கை அரசு அருங்காட்சியக மேனாள் காப்பாட்சியர், பக்கிரிசாமி, ஓவியர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.