நீதிமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த   குற்றச்சாட்டுக்குள்ளான கமுதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமிக்கு தடை

 

கமுதி  மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கமுதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமிக்கு  எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் ராமநாதன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், புகாரில் வழக்கறிஞர் முனியசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி தமிழ்நாடு கவுன்சிலுக்கு பரிந்துரைக்க உத்தரவிட்டு இருந்தார்.

 

இந்நிலையில், ஒழுங்கு நடவடிக்கை விசாரணை முடியும் வரை வழக்கறிஞர் முனியசாமி வழக்கறிஞராக தொழில்புரிய தடை விதித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அனைத்து நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் ஆஜராக அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.




 

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜனவரி 3ஆம் தேதி முதல் நேரடி விசாரணை

 

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில், வரும் திங்கள் கிழமை (ஜனவரி 3ஆம் தேதி) முதல் காணொலி காட்சி விசாரணை நிறுத்தப்பட்டு, நேரடியாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2020 மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக உயர் நீதிமன்றம் மூடப்பட்டு, அவசர வழக்குகளை மட்டும் நீதிபதிகள், தங்கள் வீடுகளில் இருந்து காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. 

 

பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நீதிபதிகள் வீட்டிலிருந்தும், நீதிமன்றத்துக்கு வந்தும் வழக்குகளை விசாரித்தனர்.அதன் தொடர்ச்சியாக, வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி வாதிட விரும்பினால், அதற்கு அனுமதி வழங்கப்பட்டு, காணொலி காட்சி மூலமும், நேரடியாகவும் என கலப்பு விசாரணை முறை அமலில் இருந்து வந்தது.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில், ஜனவரி 3ம் தேதி முதல் வழக்குகள் நேரடியாக மட்டும் விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

இதனால், காணொலி காட்சி விசாரணை முறை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அவரது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.21 மாதங்களுக்கு பின் உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கள் கிழமை முதல் மீண்டும் முழுமையாக நேரடி விசாரணை துவங்க உள்ளது.