முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை கோரிப்பாளையம் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து  செல்லூர் கே.ராஜூ, "அதிமுகவில் தொடர்ச்சியாக இளைஞர்கள் அலை அலையாக சேர்ந்து வருகின்றனர். அதிமுகவின் மாநாடு ஒரு வரலாறு அமைய இருக்கிறது. கட்சி துவங்கிய காலத்தில் இது ஒரு நடிகரின் கட்சி 50 நாள் கூட நீடிக்காது என்று எல்லாம் பேசினார்கள். ஆனால் இன்று 50 ஆண்டுகளில் நிறைவு செய்து தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த கட்சியாக தற்போது பொன் விழா மாநாடு கொண்டாட இருக்கிறது. அதிமுக தொண்டர்களின் எழுச்சியோடும் உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அதிமுக மாநாடு அமைய இருக்கிறது. தொகுதிக்கு 25 ஆயிரம் வீதம் அதிமுக மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடு செய்து வருகிறோம். மதுரையில் மற்றொரு சித்திரை திருவிழா காண இருக்கிறோம். அதிமுகவில் தற்பொழுது வரை மதுரையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு உள்ளனர். 




தக்காளி விலை உயர்ந்ததால் மக்கள் தக்காளியை மறந்து போய் உள்ளனர். அதிமுக ஆட்சிக்காலத்திலும் காய்கறி விலை ஏற்றம் இருக்கும். ஆனால் அதனை சமாளிக்க முன்கூட்டியே திட்டம் வகுப்போம் இந்த அரசு கமிஷன் கரப்சன் என்பதை நோக்கியே உள்ளது. அமைச்சர்கள் அனைவரும் தூங்குவார்களா இல்லையா? என்று தெரியவில்லை? எப்பொழுது அமலாக்கத்துறை வரும்போது ஐடி துறை வரும் என யோசித்துக்  பயந்து கொண்டே இருக்கிறார்கள்,  முதல்வரும் அவரது குடும்பமும்  செந்தில்பாலாஜி வாய் திறந்து என்ன பேசுவாரோ என பயந்து போய் உள்ளனர். மதுரையின் மைந்தனாக இருக்கக்கூடிய பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறார் அவரை கண்டுபிடிங்கள். 




மக்கள் போட்ட பிச்சையால்தான் திமுகவினர் அமைச்சர், எம்.எல்.ஏ என பதவியில் இருக்கிறார்கள். ஆனால் அமைச்சர்கள்  பிச்சை என வாய் கொழுப்பாக பேசி வருகின்றனர்.  அதிமுக மட்டுமே ஜனநாயகத்தின் படி இயங்கும் ஒரே கட்சி இங்குதான் ஏழை பணக்காரன் சாதி மத வேற்றுமை கிடையாது. அனைவரும் உயர் பொறுப்புக்கு வர முடியும். குறிப்பாக  தனபால் சபாநாயகராக அமர்த்தப்பட்டார். ஒரு காவல்துறை உயர் பொறுப்பில் இருக்கும் டி.ஐ.ஜி தற்கொலை செய்து கொண்டிருப்பது உண்மையிலேயே மன வேதனையை ஏற்படுத்துகிறது. உரிய சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். அதிமுகவை விட்டு சென்றவர்கள் கட்சி குறித்து பேசுவார்கள். எங்கள் கட்சி  தலைவர் குண்டுக்கே பயப்படாதவர் நாங்கள் எதைக் கண்டும் பயப்பட மாட்டோம்” என்று சிரித்தபடியே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.