வருங்காலங்களில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தை முறையாக செயல்படுத்தவும், தகுதியான எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு உரிய காலத்தில் கல்வித் தொகை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும் சமூக நீதித்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விஆண்டின் தொடக்கத்திலேயே கல்வி உதவித் தொகை வழங்க உத்தரவிடக்கோரி வேதாச்சலம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயணபிரசாத் அமர்வு விசாரித்தது.

 

இதையடுத்து நீதிபதிகள், " பொருளாதார சிக்கல்களால் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் உயர் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டம் உரிய காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டும். 

எனவே, வருங்காலங்களில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தை முறையாக செயல்படுத்தவும், தகுதியான எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு உரிய காலத்தில் கல்வித் தொகை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும் சமூக நீதித்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும்" என உத்தரவில் கூறியுள்ளனர்.

 
















மற்றொரு வழக்கு

 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், ஜனவரி 1 முதல் 17ஆம் தேதி வரை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் யாத்திரை நடத்த அனுமதி கோரிய வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில இணைச்செயலர் பரத் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் வேண்டுதல் மற்றும் விரதத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு யாத்ரா தென் தமிழகத்தில் ஜனவரி 1 முதல் 17 ஆம் தேதி வரை திருச்சி மலைக்கோட்டை பகுதியில் யாத்திரையைத் தொடங்கி சமயபுரம், சுவாமிமலை, திருத்துறைப்பூண்டி, ராமநாதபுரம், திருமங்கலம், பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக மீண்டும் திருச்சி விராலிமலையில் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

 

இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே, காவல்துறையினர் உத்தரவை ரத்து செய்து பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பாக் இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கை ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.