சைபர் குற்றங்களை கையாளக்கூடிய விசாரணை அதிகாரிகள் யார் யார் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் ஜாமீனில் வெளிவந்த பிறகு மீண்டும் அவதூறான கருத்துக்களை யூ டூயூப்பில் பரப்பியதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது, ஏற்கனவே இந்த வழக்கில் நீத்மன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் ராமகிருஷ்ணனை நியமித்திருந்தார். வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் ஆஜராகி யூ டியூப் தொடர்பான விதிகள், சமீபத்திய சட்டத்திருத்தங்கள் மற்றும் முழு விபரங்களைத் தாக்கல் செய்து சைபர் கிரைம் குற்றங்களில் எவ்வாறு நடவடிக்கைகள் எடுக்க முடியும் என நீதிபதியிடம் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி யூ ட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் யூடியூபர் ஆக இருந்து கொண்டு அவர்கள் இஷ்டத்திற்கு வீடியோக்களையும் காட்சிகளையும் வெளியிடுகின்றனர் இதில் அவர்கள் பணம் பலன் அடைந்து கொள்கின்றனர் இதனால் பல்வேறு பிரச்சனைகள் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றது என கருத்து தெரிவித்தார்.
பின்னர் தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்க எத்தனை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் அவர்களின் விசாரணை அதிகாரி யார் என்பது குறித்த தகவல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை அளித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், "இந்த வழக்கில் நோக்கம், சிசிடிவி காட்சிகள், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலை மறைவாக இருந்தது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களுமே. இந்த வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில் இவற்றைக் கருத்தில் கொண்டு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்தும், அதுவரை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.