தமிழ்நாட்டில் நூற்றாண்டுகள் கடந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் கூட்டம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.  இது தொடர்பான கூட்டத்தில் புராதனமான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பிக்கவும், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்தவும் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.


 





 



 

தமிழ்நாட்டில் 1000க்கும் மேற்பட்ட புராதான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து பராமரித்தல் மேலும் புனரமைப்பு பணிக்கான மதிப்பீட்டினை பரிசீலித்து அதன் பின்பு திருப்பணிகள் தொடங்க  அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பழமையான கோயில்களை புனரமைக்க இந்து அறநிலையத்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் முதல் கட்டமாக பிரசித்தி பெற்ற சிறிய அளவிலான 10 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.




 


மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் கோயில், சிம்மக்கல் விநாயகர் கோயில், பழங்காநத்தம் கோதண்டராமர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், சோழவந்தான் வரதராஜர் பெருமாள் கோயில், ஜெனகை மாரியம்மன் கோயில், வேங்கட சமுத்திரம் காளியம்மன் கோயில், தனிச்சியம் சாஸ்தா அய்யனார் கோயில் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோயில்களில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாநில அளவிலான திருப்பணி நிபுணர் குழு அனுமதி வழங்கி உள்ளது.

குறிப்பாக சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பது, கோயில் மண்டபங்களை அழகுப்படுத்துதல், வர்ணங்கள் பூசுதல், கோபுர சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும், விரைவில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மூலம் திட்ட வரையறை தயாரிக்கப்படும் என கோயில் நிர்வாகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.