திண்டுக்கல்லில் நாடோடி கூட்டத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தனர் தனியார் அறக்கட்டளையை சேர்ந்த பெண்கள். மகிழ்ச்சியில் உறைந்த நிறை மாத கர்ப்பிணி பெண்.
மதுரை கல்மேட்டு பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர். இவர்களுக்கு தொழில் ஊர், ஊராக சென்று உறுமியடித்து சாட்டையால் தன்னை தானே அடித்துக் கொண்டு பொதுமக்களிடம் யாசகம் பெற்று குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு நிரந்தர இடம் கிடையாது. இந்நிலையில் திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் தற்பொழுது தங்கி பொதுமக்களிடம் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாடோடி கூட்டத்தைச் சேர்ந்த தாய் தந்தையை இழந்த கருத்தம்மாள் அதே கூட்டத்தைச் சேர்ந்த அர்ஜுன் என்பவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கருத்தம்மாள் நிறை மாத கர்ப்பிணியானார்.
இதனையடுத்து வளைகாப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்வதற்கு வழியில்லாமல் ஏக்கத்துடன் இருந்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான கருத்தம்மாளின் ஏக்கத்தை போக்கும் வகையில் வளைகாப்பு நடத்திட பெண்களால் நடத்தப்படும் தனியார் தன்னார்வ அமைப்பு முன் வந்தது. இந்நிலையில் இன்று 11.12.25 திண்டுக்கல் R.M.காலனியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மீட்டிங் ஹாலில் கருத்தம்மாளுக்கு வளைகாப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக கர்ப்பிணி பெண்ணான கருத்தம்மாளுக்கு சிகை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு புது பட்டு புடவை, வளையல், மாலை, இனிப்பு பலகாரம் என 9 வகையான சீர்வரிசை தட்டு வைக்கப்பட்டு கருத்தம்மாளுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வளையல் அணிவித்து தமிழ் முறைப்படி வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் தன்னார்வு அமைப்பைச் சேர்ந்த பெண்கள், நாடோடி கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கருத்தம்மாளுக்கு சந்தன, குங்குமம் இட்டு வளையல் போட்டு விட்டு சிறப்பாக வளைகாப்பை நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம் என ஒன்பது வகை சாதங்கள் ஊட்டி விடப்பட்டது. இதுகுறித்து கருத்தம்மாள் கூறுகையில் , எங்களது கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை யாருக்கும் வளைகாப்பு செய்ததில்லை ஆனால் எனக்கு வளைகாப்பு செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக ஏக்கத்துடன் இருந்த போது எனது இயக்கத்தை புரிந்து கொண்டு தன்னார்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள் வளைகாப்பு நடத்தி வைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது என தெரிவித்தார்