தேனி மாவட்டம் சின்னமனூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார் 31 வயதாகும் மதுரையைச் சேர்ந்த உதயகுமார் என்ற யூசப் அஸ்லாம். இவரின் தந்தை சமுத்திர பாண்டிய நாடார் ஆவார். மதம் மாறிய இவர் மதுரையில் கல்லூரி படிக்கும்போது நசீமா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார்.  இவரது மனைவி தேனி மாவட்டம் சின்னமனூர் என்பதால்,  சின்னமனூருக்கு குடிபெயர்ந்து சின்னமனூரிலேயே பிரியாணி கடை ஒன்றை  நடத்தி தொழில் செய்து   வந்துள்ளார்.



இவர் மதுரையிலிருந்து சின்னமனூருக்கு ஒரு வருடத்திற்கு முன்பாக குடிபெயர்ந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே பிரியாணி கடை தொடங்கியுள்ளார் இவர். சமீபத்தில் சமூக வலைதளங்களில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த தேசிய தீவிரவாத தடுப்பு புலனாய்வு துறை அதிகாரிகள் அவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.


     தேசிய தீவிரவாத தடுப்பு புலனாய்வு துறையினர், பல்வேறு உலக அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் நபர்களை கண்டறிந்து அவர்களை கண்காணித்தும், புலனாய்வு செய்தும் வருகின்றனர். இந்த அமைப்பிற்கு தேனி மாவட்டம் சின்னமனூரில் வசிக்கும் யூசூப் அஸ்லாம் என்ற நபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.



முதற்கட்டமாக சின்னமனூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்த அவர்கள் இன்று அதிகாலை நான்கு மணி முதலே யூசூப் அஸ்லாம் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவரை விசாரித்து வருகின்றனர். மேலும் சின்னமனூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலும் மற்றும் NIA அமைப்பில் இருந்து நான்கு பேர் கொண்ட குழு ஒன்று அவரை விசாரித்து வருகிறது. மேலும் அவரிடம் இருந்த செல்போன், லேப்டாப் போன்ற  மின்சாதனப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, லேப்டாப் செல்போனில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் இறுதியிலேயே இந்த சம்பவம் குறித்த முழு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



       இந்த சம்பவம் தொடர்பாக யூசூப் அஸ்லாம் வசிக்கும் சின்ன பள்ளிவாசல் தெருவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் விசாரணை நடத்தப்பட்ட வீட்டில் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் யூசூப் அஸ்லாமின்  ஜமாத்தை  சேர்ந்த நபர்கள்  திரண்டு, விசாரணை செய்யும் நபரை ஏன் குற்றவாளிகள் போல் சித்தரிக்கிறார்கள் என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. தேனி மாவட்டம் சின்னமனூரில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக நபர் குறித்த விசாரணை நடைபெறுவதால்  அப்பகுதி முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


கனிம வளம் கொள்ளை, புரளும் கரன்சி’ கண்டுக்கொள்ளுமா அரசு..?