பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள செக்கானூரணியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது ஸ்டாலின்  சொன்னார். தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று கூறுகிறார். அது எந்த வாய்? இது எந்த வாய்? எடப்பாடியார் முதலமைச்சர் இருந்த பொழுது 2 கோடியே 18 லட்சம் குடும்பங்களுக்கு கொரோனா காலத்தில் ஆயிரம் ரூபாய் வழங்கினார். அதனை தொடர்ந்து பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கினார். இதை நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை. இன்றைக்கு 28 மாத திமுக ஆட்சியில் 150 சகவீத சொத்து வரி உயர்ந்து விட்டது. மின் கட்டணம் உயர்ந்து விட்டது, பால் விலை உயர்ந்துவிட்டது நெய் விலை எட்டு முறை உயர்ந்து விட்டது, வேட்டி முதல் காலனி வரை உள்ள அனைத்து பொருள்களும் 40% விலைவாசி உயர்ந்துள்ளது.



 

 

ஆனால் இன்றைக்கு நிதி அமைச்சர் தனிநபர் வருமானம் உயர்ந்துவிட்டது என்று கூறுகிறார். தனிநபர் வருமானம் ஏறவில்லை ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தின் கடன் சுமை உயர்ந்து விட்டது. இன்றைக்கு மூன்று லட்சம் கோடி கடனை இந்த 28 மாதத்தில் மக்கள் மீது சுமத்திவிட்டனர். எய்ம்ஸ் மருத்துவமனையின் செங்கலை காட்டிய உதயநிதி அந்த செங்கல் கொண்டு வந்து மீண்டும் அடிக்கல் நாட்டுவரா? அதேபோல் தமிழகத்தில் சேலம், கோவை, மதுரை ஆகிய மூன்று இடங்களில் பஸ் போர்ட் திட்டத்தை எடப்பாடியார் கொண்டு வந்தார். அதில் திருமங்கலத்தில் பாஸ்போர்ட் அமைத்திட இடம் தேர்வு செய்யப்பட்டது அந்த திட்டத்தை காணோம், அதேபோல் எடப்பாடியார் ஆட்சியில் திருமங்கலத்தில் புதிய பேருந்து அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது அந்த திட்டமும் காணோம். அதே போல் திருமங்கலம் ரயில்வே மேம்பாலம் திட்ட பணியை கொண்டு வந்தோம் அந்தத் திட்டத்தையும் காணோம், அதே போல் இந்த செக்கானூரணி பகுதியில் பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்ய செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் எதிர்ப்பை மீறி மின் மயானத்தை கொண்டு வருகிறார்கள், தொடர்ந்து மக்கள் இதற்காக போராடி  வருகிறார்கள் இந்தத் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற மக்கள் பிரச்னையில் எதிர்க்கட்சி தொகுதிகளை புறக்கணித்தால் மக்களின் பிரச்னைக்காக என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். மக்களுக்காக தான் பதவி பதவிக்காக மக்கள் அல்ல.

 

இன்றைக்கு திமுக 520 தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள் நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து எதையும் செய்யவில்லை அதேபோல் ஐந்து பவுன் நகை வைத்தால் நகை கடன் ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். அதை நம்பி 35 லட்சம் பேருக்கு பட்டை நாமம் போடப்பட்டுள்ளது. இன்றைக்கு கர்நாடக அரசு தண்ணீர் தர மாட்டோம் கூறி வருகிறது இன்றைக்கு எடப்பாடியார் இருந்து இருந்தால், தமிழ்நாடு கொந்தளித்து இருக்கும் எடப்பாடியார் மாபெரும் சட்டப்போராட்டம் நடத்தி தண்ணீரை பெற்று தந்திருப்பார். சனாதானத்தை பற்றி  பேசும் உதயநிதி காவிரி பிரசனைக்கு கடுமையான கண்டன அறிக்கை விட திராணி உள்ளதா? ஏனென்றால் கூட்டணி உடைந்து விடுகின்ற பயம். கூட்டணித் தலைவர் யார், பிரதமர் வேட்பாளர் யார் என்று சொன்னாலே அந்த கூட்டணி சுக்கு நூறாவது உடைந்து விடும் இன்றைக்கு தலைஇல்லா முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது.



 

 

99% தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்று விட்டோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். இந்த கூட்டத்தின் வாயிலாக சவால் விடுகிறேன் மக்கள் மத்தியில் இதுகுறித்து விவாதிப்போம் அப்படி மக்கள் 99 சகவீத வாக்குறுதி நிறைவேற்றி விட்டார்கள் என்று கூறினால் நாங்கள் பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறோம். மதுரையில் ஆக 20ம் தேதி எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை கண்டு இன்றைக்கு ஸ்டாலினுக்கு ஜன்னி காய்ச்சல் வந்துவிட்டது. மேலும் ஒரே நாடு, ஒரே திட்டத்தின் மூலம் ஸ்டாலின் கவலையில் இருந்து உள்ளார். இவ்வாறு பேசினார்.