மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக மீனவ குடும்பங்களுக்கு தலா 5,000 நிவாரணம் வழங்கி வந்த நிலையில்,  தற்போது கூடுதலாக ஆயிரம் ரூபாய் உயர்த்தி 6000 ரூபாய் வழங்க  முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதற்கு தீபாவளி பண்டிகை வர உள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இதற்கு  வரவேற்பு தெரிவித்துள்ளனர். கிழக்கு கடற்கரை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதியில் இருந்து ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். அதே போல மேற்க்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து ஜூலை 31 ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும். இந்த மீன்பிடி தடைக்காலங்களில் விசைப்படகுகள், இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கச் செல்பவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை நம்பி இருக்கும் மீனவ குடும்பங்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது.




மீன்கள்‌ இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல்‌ ஜூன் 15 வரை 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அரசால் தடை விதிக்கப்படுகிறது. இதனால் தமிழ‌க கடலோர பகுதிகளான ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகை, திரு‌வள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில்‌ உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதியில்லை. இந்த காலங்களில் தமிழகத்தில்‌ உள்ள 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த  விசைப்படகுகளை மீனவர்கள் கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைப்பர். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2016 வரை மீன்பிடி தடைக்காலம் 45 நாட்களாக கடைப்பிடித்து வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 61 நாட்களாக மீன்பிடி தடைக் காலம் அதிகரிக்கப்பட்டது. இந்த தடை காலத்தில் மீன்கள் வரத்து குறைவு காரணமாக நாட்டு படகுகளின் மூலம்  கரையோரங்களில்  பிடித்து வரப்படும் மீன்களுக்கு அதிகம் கிராக்கி இருக்கும்.




மீன்பிடி தடைக்காலங்களில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி, வாலிநோக்கம், முந்தல், மாரியூர், மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த நேரங்களில் மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைப்பது, பழுது பார்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். இந்த நேரங்களில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், அவர்களுக்கான நிவாரண நிதி அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை மீன்பிடி குறைவு காலம் மற்றும் மீன் பிடித்தடை காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.