ராம்பிரபு என்கிற ராஜேந்திரன் என்பவர் ஆஸ்திரேலியாவில் இரிடியத்தில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி பல கோடி ருபாய் மோசடி செய்ததாக அவர் மீது விருதுநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி ராம்பிரபு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கில் ராம்பிரபுவிற்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, பல்லாவரத்தை சேர்ந்த முகமது தமீம் என்பவர் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார் .அதில் "குற்றம் சாட்டப்பட்ட ராம்பிரபு இரிடியத்தை ஆஸ்திரேலியாவிற்கு விற்பனை செய்துள்ளதாகவும், அதற்காக தனக்கு வர வேண்டிய 10 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை பெறுவதற்கு, ரிசர்வ் வங்கி மூலமாக சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதற்கு 133 நபர்களை இதில் உறுப்பினர்களாக இணைத்தால் மட்டுமே பணத்தை பெற முடியும் என்று கூறினார். அதோடு, அதற்கான பரிவர்த்தனை நடைமுறைக்கு எனக்கூறி பத்து லட்ச ரூபாயை செலுத்தினால், ஒரு கோடி ரூபாயாக திருப்பி கொடுக்கிறேன் என்று கூறி என்னிடமிருந்து 10 லட்சம் ரூபாயை பெற்றுக்  கொண்டார். இதேபோல் 133 நபர்களிடம் இருந்தும் பணத்தை  பெற்றுள்ளார். அதன் பின்னரே அவர் இதுபோன்ற பல நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, மோசடி செய்துள்ளது தெரியவந்தது.  ராம்பிரபு இந்த வழக்கின் சாட்சியங்களை அழிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்"என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது ராஜேந்திரன் தரப்பில், "இடையீட்டு மனு தாக்கல் செய்த முகமதுவிற்கும் மனுதாரருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் உள்ளதே தவிர, இரிடியம் போன்ற தகவல்கள் பொய்யானவை" என தெரிவிக்கப்பட்டது. முகமது தரப்பில், "நடிகர் விக்னேஷும் 1 கோடியே 17 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு மனுதாரர், தரப்பில் நடிகர் விக்னேஷ்  30 லட்ச ரூபாயையே கடனாக  வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.