ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தவர் முத்துராமலிங்க தேவர். இவர்  தனது வாழ்நாளில் அரசியலையும், ஆன்மீகத்தையும் தனது இரு கண்களாகப் பாவித்து செயல்பட்டு வந்தார். கடைசி வரையிலும் பிரமச்சாரி வாழ்க்கையையே வாழ்ந்தார். பசும்பொன்னில், தனது வீட்டில் உள்ள பூஜை அறையி்ல் தினசரி தேவர் நீண்ட நேரம் தியானத்திலும், பூஜையி்ல் ஈடுப்பட்டவர். சிறந்த ஆன்மிகவாதியும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஒவ்வொரு வருடமும், அக்.28, 29, 30  ஆகிய தேதிகளில் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிட மண்டபம் வளாகத்தில் நடைபெறுகிறது. தேவரின் பிறந்த தேதியும், இறந்த தேதியும் அக்டோபர் 30  ஆகும். எனவே ஆண்டு தோறும் அக்டோபர் 30ஆம் தேதி தேவரின் ஜெயந்தி விழாவும், குருபூஜை விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவரின் ஆன்மீக வாழ்க்கையை, அரசியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையி்ல் அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவும் தேவர் நினைவாலயத்தில் கொண்டாடாடப்பட்டு வருகிறது.




அந்த வகையில், இந்த ஆண்டு  முத்துராமலிங்க தேவரின் 114 -வது ஜெயந்தி விழாவும், 59வது குரு பூஜையையும் வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் 5 நபர்களுக்கு மேல் ஒன்றாக கூட கூடாது, வாடகை வாகனங்களில் வரக்கூடாது, முளைப்பாரி, ஜோதி ஓட்டம் ஊர்வலம், பேரணி போன்ற நிகழ்வுகள் நடத்த அனுமதி இல்லை, வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அரசியல் தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் காமாட்சி கணேசன் (பொறுப்பு) வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளார். முன்னதாக குருபூஜைக்கான  முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) காமாட்சிகணேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக், கூடுதல் ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள்  பசும்பொன் கிராமத்திற்கு  வந்தனா்.





அங்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள், முக்கிய பிரமுகா்களின் வழித்தடங்கள், வரவேற்பு நிகழ்வுகள், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், சுகாதாரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனா். நினைவாலயத்தில் உள்ள தியானம் மண்டபம், கூட்ட அரங்கம், சுற்றுப்புறச் சுவா் உள்ளிட்டவைகளில் நடைபெறும் வண்ணம் தீட்டும் பணிகளையும் பாா்வையிட்டனா். மேலும் கூட்ட நெரிசலைத் தவிா்க்க பசும்பொன் கிராமத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறும் வகையில் வழித்தடங்களை சீரமைத்தல், குடிநீா் தொட்டிகள், கூடுதல் தற்காலிகக் கழிப்பறைகள், பொதுமக்கள் நடந்து வரும் பாதைகளில் மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை வழக்கம்போல் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.