கற்பக தரு என அழைக்கப்படும் பனை மரத்தில் இருந்து பதநீர், நுங்கு, கிழங்கு,  கருப்பட்டி,  பனங்கற்கண்டு என அனைத்து  பொருட்களின் பயன்பாடும் அதிகம். இந்த பனைமரத்தின் கட்டைகளால் சட்டங்கள்  அமைத்து பனைமரத்தின் பச்சை  மட்டையிலிருந்து நார் உரித்து கிழித்து அதை  இரண்டு, மூன்று நாட்கள் தண்ணீரில் ஊற வைத்து பதப்படுத்தி  வளைந்து  கொடுக்கும் தன்மை வந்த உடன் கட்டில்  கட்ட பயன்படுத்துகின்றனர். பனை  நார் மூலம் கட்டும் கட்டில் குளிர்ச்சியாக இருப்பதுடன் படுக்க சுகமாக  இருக்கும். உடல் அசதி நீங்கும். கிராமங்களில் இன்னும் பெரியவர்கள் வீட்டு  முற்றத்தில் நார் கட்டில் போட்டு காற்று வாங்குவது உண்டு. இந்த நார்  கட்டில் கட்டும் தொழிலில் பனைத் தொழிலாளர்கள் பரம்பரையாக ஈடுபட்டு  வருகின்றனர். தங்போது ஸ்டீல் கட்டில், மரக்கட்டில் வந்தாலும் கிராமங்களில்   நார் கட்டிலுக்கு இன்றும் அதிக வரவேற்பு உள்ளது.



 


'மீண்டும் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத சுகமான பனை நார் தயாரிப்புகட்டில்களுக்கு மாறும் பொதுமக்கள்'


பச்சை பனை ஓலையை வெட்டி .அதன் மட்டையிலிருந்து உரித்து எடுக்கப்பட்ட நாரை நீரில் ஊற வைத்து பின்னப்பட்ட கட்டில்களை  முன்பெல்லாம் பல வீடுகளில் காணமுடிந்தது. ஆனால், நாகரீக மாற்றத்தில் இவையெல்லாம் காற்றில் கரைந்து காணாமல் போய்விட்டது. ஆனால், தற்போது   ராமநாதபுரம் மாவட்டம்   சாயல்குடி பகுதியில் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கட்டில்களை மறந்து மீண்டும் பனை நார்களில் செய்யப்படும் கட்டில்களுக்கு பொதுமக்கள் மாறி வருகின்றனர். 



பனை மரத்திலிருந்து பதநீர், நுங்கு,  கிழங்கு என உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல்வேறு உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. இதுதவிர பனைமரத்தின் ஓலை மட்டை என அதன் அனைத்து பாகங்களுமே கைவினைப் பொருட்கள், பெட்டி, பாய், கட்டில் போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றன. அதிலும் குறிப்பாக, பனைமட்டை நாரிலிருந்து பின்னப்படும் கட்டில் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இந்த நார் கட்டில்  கட்டும் தொழிலில் பனைத் தொழிலாளர்கள் பலர் பரம்பரையாக ஈடுபட்டு வருகின்றனர்.  தற்போது நாகரீக மோகத்தால் பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் கட்டில் வருகை அதிகரித்து நார் கட்டில்களின்  பயன்பாடு சுருங்கிவிட்டது. 



'கிராமத்து வாசம் தரும் பனைநார் கட்டில்'


ஆனால், தற்போது சாயல்குடி பகுதியில் மீண்டும் பராம்பரிய பழமையுடன் பனை நார் கட்டில்களை  விரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.    பனை மரத்தின் மட்டையிலிருந்து நார் எடுத்து அதை பதப்படுத்தி தண்ணீரில் ஊறவைத்து பின் வடிவமைத்து, கட்டில் கட்டவும், ஊஞ்சல் கட்ட, சேர், டிரைவர் சீட், உள்ளிட்ட தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்துகிறார்கள். கடந்த காலங்களில் அதிகம் பயன்பட்டுவந்த பனை நார் கட்டில் தற்போது நாகரீகம் கருதி தவிர்த்து வந்த நிலை மாறி, மீண்டும் இந்த பகுதிகளில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பனை நார் கட்டில்களை  செய்ய ஆர்டர் கொடுக்க முன்வருகின்றனர். எனவே, இதன் மூலம் ஓரளவு நிரந்தர வருமானம் கிடைக்கிறது.


உடலுக்கு இதமானது, களைப்பு தெரியாது, குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும், இதன் மகத்துவம் தெரிந்தவர்கள் மறக்கமாட்டார்கள் எனவே இது மனித உடலுக்கு குளிர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் ஆர்வம் தெரிவிக்கின்றனர்.



இதுகுறித்து பனைநார் கட்டில் பின்னும் பாண்டியன் கூறுகையில், மூலப்பொருளான பனை மரம், பனை நார் ஆகியவை எளிதில் கிடைப்பதில்லை. பனை மரம் ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் ரொம்பவே குறைஞ்சுடுச்சு. பனை ஓலைக்குப் பின்புறமிருக்கும் மட்டையைத் தண்ணீரில் ஊறவெச்சு சில படிநிலைகளுக்குப் பிறகு, நார் பிரித்தெடுக்கப்படுகிறது. இதை வைத்துத்தான்  பனைநார் கட்டில் பின்னப்படுகிறது. இதை பயன்படுத்தும்  அனைவருக்கும் நல்ல குளிர்ச்சியைத் தருகிறது.


`சோஃபா, பிளாஸ்டிக் சேரில் அரை மணிநேரம் உட்கார்ந்துட்டு எழுந்திரிச்சு, உட்கார்ந்த இடத்தைத் தொட்டுப் பாருங்க. அந்த இடமும் உடலும் சூடாக இருக்கும். உடல் சூட்டால்தான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளும் வருது. பனைநார் கட்டிலில் நீண்ட நேரம் உறங்கினாலும் பனைநார் சேரில் நீண்ட நேரம் உட்கார்ந்தாலும் உடல் சூடாகாது, பனைப் பொருள்கள் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். சட்டம் (frame), நான்கு கால்கள் உட்பட பனை நார் கட்டிலில் பயன்படுத்தப்படும் எல்லாப் பொருள்களுமே பனை மரத்திலிருந்துதான் தயாரிக்கப்படுது. இதேபோல கயிறு கட்டிலும் தயாரிக்கிறோம். அவை வேம்பு, பூவரசு, தேக்கு, வேங்கை உள்ளிட்ட மரத்திலிருந்து செய்கிறோம் என தெரிவித்தார்.