பழனி திருஆவினன்குடி: சனிப்பெயர்ச்சி வழிபாடு! உங்கள் ராசிக்கு என்ன நடக்கும்? சிறப்பு பூஜைகள், தரிசனம்!
பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பழனி திருஆவினன்குடி திருத்தலத்தில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு ஹோமம் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி அடைவதையொட்டி, திரளான பக்தர்கள் எள் தீபமேற்றி வழிபாடு செய்தனர்.
ஜோதிடத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு பெயர்ச்சிகளும் ஒவ்வொரு ராசியிலும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். அந்த வகையில், ஒவ்வொரு ராசியிலும் மிகப்பெரிய ஏற்றத்தையும், இறக்கத்தையும் உண்டாக்கும் பெயர்ச்சியாக கருதப்படுவது சனிப்பெயர்ச்சி ஆகும். நடப்பாண்டில் சனிப்பெயர்ச்சி மார்ச் மாதம் நடக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, மார்ச் 6ம் தேதி வெள்ளிக்கிழமை இன்று சனிப்பெயர்ச்சி நடக்கிறது. அதாவது, சனி பகவான் கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு சஞ்சாரம் செய்கிறார். பொதுவாக, சனிப்பெயர்ச்சி நாளில் அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
உலகத் தமிழர்களின் முதற்கடவுள் முருக பெருமான் எனவும், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது பழனி முருகன் கோயில். உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடான பழனி, மலைக்கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள திருஆவினன்குடி திருத்தலத்தில் சனீஸ்வர பகவான் தனிச்சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதையொட்டி, இக்கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் தொடங்கின.
இதனை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், பக்தர்கள் நலன் வேண்டியும் சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டுப் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து எள் தீபமேற்றித் தங்கள் ராசிகளுக்குரிய பரிகாரப் பூஜைகளைச் செய்து வழிபட்டனர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் வரிசைப்படுத்துதல் உள்ளிட்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ட்ரெண்டிங் செய்திகள்






















