பழனி தைப்பூச திருவிழா: முருக பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த அதிசயம்! தேரோட்டம், திருக்கல்யாணம் - முழு விவரம்!
பழனியில் தைப்பூசத் திருவிழாவின் கடைசி நாளான நேற்று தெப்பதேர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைந்தது.

உலகத் தமிழர்களின் முதற்கடவுள் முருக பெருமான் எனவும், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது பழனி முருகன் கோயில். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர்.

வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இந்த கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வருவதுண்டு. மிகவும் சிறப்பு மிக்க இக்கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான தைப்பூசத்திருவிழா மிகவும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியநாயகி அம்மன் கோயில் தைப்பூசத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, பழனி மலைக் கோயிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்து பாத யாத்திரையாக வந்தனர். பழனி தைப்பூசத் திருவிழாவின் ஆறாம் நாளில் முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வயானை திருக்கல்யாண நிகழ்ச்சி பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்றது. அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானை கழுத்தில் மங்களநாணை சூட்டினார். தொடர்ந்து தம்பதி சமேதராக மணக்கோலத்தில் வள்ளி-தெய்வானையுடன் தம்பதி சமேதராக வெள்ளித்தேரில் எழுந்தருளினார்.

தொடர்ந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து துவங்கிய தேரோட்டம் நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்தனர். வள்ளி, தெய்வயானை சமேதராக தேரில் எழுந்தருளிய அருள்மிகு முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து தைப்பூசத்தின் இறுதி நிகழ்ச்சியக நேற்று 4ம் தேதி இரவு தெப்பத்தேரோட்டமும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத்திருவிழா நிறைவடைந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு ஏற்பாடாக பக்தா்களுக்காக கிரிவீதியில் மேற்கூரைகள், தடுப்புகள், குடிநீா் வசதிகள் செய்யப்பட்டன. அழகுநாச்சியம்மன் கோயில் முன் தொடங்கிய பக்தா்களின் வரிசை குடமுழுக்கு நினைவரங்கு வரை நீண்டிருந்தது.






















