பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை: பக்தர்கள் அளித்த காணிக்கை தொகை எத்தனை கோடி தெரியுமா?
பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1324ம் கிடைத்தன.

பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், உண்டியல்கள் நிரம்பியதால் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. எண்ணிக்கையில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூ5.27கோடியை தாண்டியது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் இருப்பதால் இங்கு வந்து வழிபட்டு தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர். ஆண்டுதோறும் பழனி மலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி, தைப்பூசம் திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள்.
இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். விழாக்காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்துவிட்டு உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில், கோயில் வளாகத்தில் பல்வேறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், அதில் உள்ள பணம், தங்கப் பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது. இதையடுத்து பழனிக்கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் இரண்டு நாட்களாக உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்படுகிறது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூபாய் 5 கோடியே27 இலட்சத்து 16 ஆயிரத்து 754கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

தங்கம் 565கிராமும், வெள்ளி 26ஆயிரத்து 265கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1324ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையில் திருச்சி மலைக்கோட்டை உதவி ஆணையர், செயல் அலுவலர் அருட்செல்வம் மற்றும் பழனியாண்டவர் கல்லூரி மாணவியர், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் எண்ணிக்கையில் ஈடுபட்டனர்























