உலகத் தமிழர்களின் முதற்கடவுள் முருக பெருமான் எனவும், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது பழனி முருகன் கோவில். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இந்த கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வருவதுண்டு.

Continues below advertisement

பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் வெகுசிறப்புடன் நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 7-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பின் சண்முகார்ச்சனை, சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 6.45 மணிக்கு தங்க சப்பரத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

விழாவின் 6-ம் நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. அதையடுத்து யாகசாலையில் இருந்து பரணி தீபம் மூலவர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரணி தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் 6 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரருக்கு சிறப்பு அலங்காரம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து 6.45 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உட்பிரகார உலா நிகழ்ச்சி நடந்தது. பின்பு 7.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெற்றது.

இந்நிலையில் திருவிழாவில் இன்று புதன்கிழமை பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெற்றது.

குறிப்பாக கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி இன்று தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.  மேலும் கார்த்திகை திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இதில் பக்தர்கள் வருகைக்கு ஏற்ப, பிற்பகல் 2 மணியளவில் குடமுழுக்கு அரங்கம் நுழைவு வாயில் தற்காலிகமாக அடைக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் மாலை 6 மணிக்கு மேல் தரிசனத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலை மீது சென்று சாமி தரிசனம் செய்தனர்.    மலைமீதுள்ள முருகன் கோவிலில் மாலையில் சாயரட்சை பூஜைக்கு பிறகு விநாயகர், சின்னகுமாரருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பனை ஓலைகளால் உருவாக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்யும் போது தங்கள் மனதில் உள்ள தீய எண்ணங்களும் எரிந்து சாம்பலாகி, நல்ல சிந்தனைகள் மேலோங்குவது ஆக பக்தர்கள் நம்புகின்றனர். சொக்கப்பனை கொளுத்தும் கூடிய நிகழ்ச்சியில் கோயில் ஊழியர்கள் அர்ச்சகர்கள், பக்தர்கள் பலரும்  கொண்டனர்.