அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரிந்து கிடப்பதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் பேசுகின்றனர் என காளையார்கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., பேட்டியளித்துள்ளார்.
மருது சகோதரர்களின் 224-ஆம் ஆண்டு குருபூஜை விழா
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருது சகோதரர்களின் 224-ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். அப்போது 6.5 கிலோ எடையுள்ள வெள்ளி கவசத்தினை வழங்கினார்.
திமுகவிற்கு வரும் தேர்தலில் அதிக வாய்ப்பு - ஓ.பி.எஸ்., விளக்கம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “தமிழகம் மட்டுமல்ல இந்திய நாடு வல்லரசாக உலக அளவில் செயல்பட காரணமாக இருந்தவர் மருது பாண்டியர்கள். அவர்களின் தியாகம் விலைமதிப்பற்றது” என்றார். தொடர்ந்து, “அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரிந்து கிடப்பதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வாய்ப்பு, இருப்பதாக பொதுமக்கள் பேசுகின்றனர். இதனை நான் சொல்லவில்லை. யாருடைய அரசியல் வாழ்க்கையும் பிரகாசமாக இருப்பது என்பது மக்களின் கையில் தான் உள்ளது.
சட்ட போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறோம்
அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக புரட்சித்தலைவர் உருவாக்கினார். கழகத்தின் தொண்டர்கள் மூலமாக பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் சட்ட விதிமுறை. ஆனால் அதனை தற்போது உருமாற்றி விட்டனர். திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை நீக்குவதற்கு அக்கட்சியில் இருந்த சில பொது குழு உறுப்பினர்கள் தான் காரணம். தனக்கு ஏற்பட்ட நிலை இனிவரும் அதிமுக பொதுச்செயலாளர்களுக்கு ஏற்படக்கூடாது, என்பதற்காகத்தான் தொண்டர்கள் மூலமாக பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் விதிமுறையை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொண்டு வந்தார். புரட்சித் தலைவர் கொண்டு வந்த சட்டத்தை நிலைநாட்டுவதற்காக நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.