அதே கோரிக்கையுடன் உள்ள மற்ற வழக்குகளோடு விசாரணைக்கு பட்டியலிட உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.
திருநெல்வேலியை சேர்ந்த பெருமாள் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்களில் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பு இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் கடந்த 9.12.21அன்று வெளியிடப்பட்டது.இந்த அறிவிப்பில் இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விண்ணப்பத்தில் அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, ஒவ்வொரு கோவிலிலும் எத்தனை அறங்காவலர்கள் பணியிடங்கள் உள்ளன?எவ்வாறு தேர்வு செய்யப்பட உள்ளனர்? போன்ற தேவையான தகவல்கள் எதுவும் இல்லை. பொதுவாக விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளனர். இந்த முறையில் அறங்காவலர் குழு தேர்வு நடந்தால், இலகுவாக விண்ணப்பங்களை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, வெளிப்படைத்தன்மையுடன் நியமனம் நடைபெற வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் கோவில்களில் நிர்வாகம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களில் நிர்வாகத்தின் தலைமையில் இருப்பவர்கள் தெளிவுடன் இருக்க வேண்டும்.
இதுபோல் பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை . எனவே இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் அறங்காவலர் நியமனத்திற்கு 09.12.21 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிப்பதோடு, அறிவிப்பாணையை ரத்து செய்தும், போதிய விவரங்களுடன் புதிதாக. அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அரசுத்தரப்பில், இது போன்ற வழக்கு நிலுவையில் உள்ளதாகவும்,அதோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.அதையேற்ற நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் உள்ள வழக்கோடு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.