நாம் தமிழர் vs த.வெ.க: தேனியில் மோதல்! சாட்டை துரைமுருகன் பேச்சுக்கு பிறகு பரபரப்பு, கார் கண்ணாடி உடைப்பு!
தேனியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு பேசியபோது பரபரப்பு.

நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசிக் கொண்டிருக்கும்போது, த.வெ.க கட்சியினர் இடையூறு செய்ததால் த.வெ.க நிர்வாகிகளின் காரை சிறைபிடித்து கார் கண்ணாடி உடைத்து மோதலில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசியல் களத்தில் ஓவ்வொரு கட்சினரும், தங்களின் கூட்டணி கட்சிகளை தேர்ந்தெடுப்பது குறித்து தீவிர ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளை உறுதி செய்து வரும் 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்களை ஏற்படுத்தி தேர்தல் பணிகளை தீவிரப்பட்டுத்தியுள்ளது. இதேபோல் தமிழகத்தில் புதியதாக ஆரம்பித்து 3ம் ஆண்டை துவக்கியுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை பற்றிய பல்வேறு கருத்துக்களும், விமர்சனங்களும் ஆங்காங்கே பேசப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் களத்தில் தவெக தற்போது ஒரு தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. அதேபோல் நாம் தமிழர் கட்சியினருக்கும் தவெக-வினர்க்கும் சமூக வலைதளங்களைல் கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேனி பங்களாமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு கட்சியினர் மத்தியில் பேசினார். துரைமுருகன் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது, அவ்வப்போது இரு சக்கர வாகனங்களில் விஜய் கட்சியினர் கூச்சலிட்டவாரே சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில், தொடர்ந்து த.வெ.க தலைவர் விஜய் குறித்தும், தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி குறித்தும் துரைமுருகன் மேடையில் கடும் விமர்சனம் செய்து பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் அப்பகுதியில் ஐந்து கார்களில் வந்து கூச்சலிட்ட தமிழக வெற்றிக் கழகத்தினரின் கார்கள் சிறை பிடித்த நாம் தமிழர் கட்சியினர் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் த.வெ.க கட்சியின் நிர்வாகி கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடையூறு செய்த நபர் குறித்து தேனி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
"தேனி மாவட்டத்திற்கு வந்து பாரு" என சாட்டை துரைமுருகன் குறித்து சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய த.வெ.க மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி விமர்சனம் செய்திருந்த நிலையில், தற்போது இருக் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.























