மதுரையில் பாஜக மாநிலச் செயலாளர் இராம.ஶ்ரீனிவாசன் உருவ பொம்மை எரிக்க முயற்சி, போலீஸ் உடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் நடைபெற்று முடிந்த முருக பக்தர்கள் மாநாடு
மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. கடந்த 22-ஆம் தேதி மாலை துவங்கிய மாநாட்டில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகள், மடாதிபதிகள், பா.ஜ.க., நிர்வாகிகள், ஆன்மீகம் சார்ந்த நபர்கள் என ஏராளமானோர் பேசினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டு விழாவில் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் பாஜக மாநிலச் செயலாளர் இராம.ஶ்ரீனிவாசனும் வீடியோ ஒன்றில் பேசியிருந்தார்.
முருக பக்தர்கள் மாநாட்டில் எழும் சர்ச்சை
இந்நிலையில் இந்த மாநாட்டில் ”நக்கலே குருவிக்காரர்” - என்கிற சாதி பெயர்கொண்ட மக்களை தமிழ்க்கடவுள் முருகனின் வாரிசுகள் என்றும் இவர்கள் குறவர்கள் என்று, தவறான வரலாற்று கருத்தை திரித்து பேசியதாக, பாஜக மாநிலச் செயலாளர் இராம.ஶ்ரீனிவாசனின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா, பெரியார் குறித்த அரசியல் பேசியதாக சர்ச்சை எழுந்த சூழலில் பேராசிரியர் இராம.சீனிவாசன் பேசியும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
செருப்பால் அடித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்
மதுரை திருவள்ளுவர் சிலை அருகே வன வேங்கை கட்சிகளின் மாநில தலைவர் இரணியன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம் செய்தனர். உருவ பொம்மை எரிக்க விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். பேராசிரியர் இராம.சீனிவாசன் புகைப்படத்தை செருப்பால் அடித்து, கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டம் செய்த அனைவரையும் கைது செய்ய முயன்ற போலீசாருக்கும் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு வழியாக அனைவரையும் கைது செய்து, அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தவறான தகவல் தெரிவிக்கப்பட்டது
இதுகுறித்து வனவேங்கைகள் கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகையில், முருக பக்தர்கள் மாநாட்டில் குறவர்கள் முருகனின் வாரிசு என பேராசிரியர் ராம சீனிவாசன் பேசியதை கண்டித்தும். மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்டு தமிழகத்தில் நரிக் குறவர் என்கிற பெயரில் வாழும் நக்கலே குருவிக்காரர்களை. தமிழ்க்கடவுள் முருகனின் வாரிசுகள் என்றும், இவர்கள் குறவர்கள் என்றும், தவறான வரலாற்று கருத்து திரித்து பேசியதாக பாஜக மாநிலச் செயலாளர் இராம.ஶ்ரீனிவாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதாகவும் தெரிவித்தனர். மேலும் இராம.சீனிவாசனை வன்மையாக கண்டிப்பதாகவும், எச்சரிக்கை செய்வதாகவும் முழக்கமிட்டனர்.