மருத்துவ குணங்கள் அடங்கிய வெட்டிவேர் என்ற மூலிகை வேரைக்கொண்டு முகக்கவசம்செய்து அசத்தும் மகளிர் குழுவினர், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாற்று முகக்கவசம் தயாரித்து வருகின்றனர். கொடைக்கானலில் பிளிஸ்வில்லா எனும் பகுதியில் வெட்டி வேர்களை சேர்த்து முகக்கவசம் மற்றும் மூலிகை சோப்புகள் தயாரிக்கும் பெண்களின் புது முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி எனும் பகுதியை சேர்ந்தவர் ராணி(50) , இவர் இப்பகுதியை சேர்ந்த சுமார் 10 பெண்களை கொண்ட மகளிர் சுய உதவி குழு நடத்தி வருகிறார். மகளிர் குழு மூலம் பல்வேறு சுய தொழில் பணிகளை செய்துவரும் ராணி சமூகம் சார்ந்த பணிகள், பொதுமக்களுக்கு தொண்டு சேவைகள் என பொது வாழ்க்கையிலும் சேவை செய்து வருகின்றார். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுருத்தப்படும் நிலையில், துணியால் இருக்கும் முகக்கவசத்தால் சுவாசக்கோளாறுகள் ஏற்படுவதாகவும் ஒரே முகக்கவசத்தை அதிக நேரம் பயன்படுத்துவதால் கிருமி தொற்றுகள் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக அதனை மூலிகை வேரின் மூலம் முகக்கவசம் தயாரித்து வருகிறார்.
இவர்களுடன் 10 குழு பெண்களை ஒன்றிணைந்து பிளிஸ்வில்லா பகுதியில் வீட்டின் மாடியில் தனியாக அறை அமைத்து , தையல் இயந்திரம் கொண்டு 50 கிராம் மூலிகை வெட்டி வேரை சேர்த்து முகக்கவசம் தயாரித்து வருகிறார். இந்த முகக்கவசத்தினை பயன்படுத்தும்போது நல்ல நறுமணத்துடன் பாதுகாப்பும் பெறலாம் என்ற அடிப்படையில் பெண்கள் ஆர்வமுடன் கடந்த 20 நாட்களாக வெட்டிவேர் முகக்கவசம் தயாரித்து வருகின்றனர் . மேலும் செக்கு எண்ணெய்,வெட்டி வேர், கேரட், ரோஜா, ஆப்பிள் உள்ளிட்ட பொருட்களை கொண்டும் மூலிகை சோப்புகளும் தயாரித்து வருகின்றனர். இந்த மூலிகை சோப் மற்றும் வெட்டி வேரில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறுகின்றனர், வெட்டி வேர் முகக்கவசம் சில்லறை விற்பனையில் 50 ரூபாய்க்கும்,மொத்த விற்பனையில் 40 ரூபாய்க்கு விற்பதாகவும் கூறுகின்றனர் .
ஒவ்வொரு முகக்கவசத்தில் தங்களுக்கு 7 ரூபாய் வரை லாபம் கிடைப்பதாகவும் பெருமையுடன் தெரிவிக்கின்றனர். தற்போது மகளிர் குழுவினரால் தயாரித்து விற்கப்படும் முகக்கவசம் மற்றும் சோப்பை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதோடு இந்த தயாரிப்பு பல்வேறு தரப்பினரிடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக மகளிர் குழுவினர் கூறுகின்றனர். மகளிர் குழுவினரால் தயாரிக்கப்பட்ட இந்த வெட்டிவேர் முகக்கவசத்தை சந்தைப்படுத்த அரசுத் துறை அதிகாரிகள் உதவிசெய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.