திண்டுக்கல்லிற்கு இன்று 18.06.24 வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மோடி அரசாங்கம் எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கும் என்பது ஒரு கேள்வி குறிதான்? மோடிக்கு கூட்டணி ஆட்சி  நடத்தும் பக்குவம் இருக்குமா என்பது தெரியாது. குஜராத்திலும் சரி டெல்லியிலும் சரி பாஜகவை அனுசரித்து ஆட்சி நடத்திய அனுபவம் இல்லாதவர் . எதேச்சிய அதிகாரம் ஆட்சி நடத்தி பழக்கப்பட்டவர். கூட்டணி ஆட்சி எத்தனை நாளைக்கு நடத்த போகிறார் என்பது தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாங்கள் புறக்கணிக்கிறோம் என சொல்வது மோசடியானது.




இடைத்தேர்தலில் சந்திக்கின்ற திராணியோ, தைரியமோ அதிமுகவிற்கு இல்லை கோயமுத்தூரில் இரண்டு நாட்களில் நாங்கள் வேட்பாளரை அறிவிப்போம் என கூறிய எடப்பாடி பழனிசாமி தற்பொழுது மறுப்பதற்கு காரணம் விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை. விக்கரவாண்டி தேர்தலை அதிமுகவினர் புறக்கணித்து வாக்களிக்க மறுத்தால் கட்சி அவர் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அர்த்தம், அதே நேரம் தேர்தலை புறக்கணித்து வேறு கட்சிக்கு வாக்களித்தால் கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை என அர்த்தம்.


ஒரே ரயில் தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எப்படி வர முடியும் எதனால் குறைபாடு ஏற்படுகிறது. இது குறித்து மத்திய அரசு எந்தவிதமான விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. ஏற்கனவே ரயில்வே அமைச்சராக இருந்தவர் தான் தற்பொழுது மீண்டும் அமைச்சராக உள்ளார்.  இவர் எதற்காக அமைச்சராக உள்ளார்.  இந்த விபத்திற்கு மத்திய அரசு, மத்திய ரயில்வேதுறை தான் பொறுப்பு ஏற்க வேண்டும், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டி தப்பிக்க நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.




விபத்துக்கு உரிய காரணம் கூறாத இவர் ஏன் ரயில்வே அமைச்சராக தொடர வேண்டும். இவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்ய அச்சப்படக்கூடிய நிலை தற்பொழுது ஏற்பட்டு உள்ளது. நீட் தேர்வில் நாடு முழுவதும் பெரிய அளவில் குளறுபடிகள் ஏற்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றமே தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளது என தெளிவாக பத்திரிகையில் வந்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்று உள்ளது. இந்த மோசடி காரணமாக தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மத்திய அரசு தேவையில்லாத நீட் தேர்வை புகுத்தி பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது. ஆகவே, மத்திய அரசு உடனடியாக தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.


சட்டத்தின் அடிப்படையில் மேஜர் ஆன பிறகு யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற உரிமை உள்ளது. காதல் தம்பதிகளுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதுகாப்பு அளிக்கும். இது சமூக விரோத காரியம் அல்ல இது புனிதமான கடமை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது இதனை எதிர்க்கும் சமூக விரோதிகள் மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.




இந்த விவகாரத்தில் காவல்துறை மிகவும் அலட்சியமாக செயல்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து பல கோரிக்கைகள்  வைக்க உள்ளோம். நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆணவ படுகொலை சம்பந்தமான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளோம். மேலும் காதல் திருமணம் செய்து கொள்வோர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இதற்கு எல்லா கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.