மதுரை அனுப்பானடி சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவர் அதே பகுதியில் பரோட்டா கடை நடத்தி வந்தார். அந்த பகுதியில் இவர் சில வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். இந்த நிலையில் அந்த வீடுகளில் ஒரு வீட்டில் இருந்த கணவன், மனைவி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். 9 வயதான அந்த சிறுமியை திடீரென ஒருநாள் நாகராஜ் தனது வீட்டிற்கு அழைத்து பாலியல் தொந்தரவு அளித்தார்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கூச்சலிட்டு அவரிடம் இருந்து தப்பியது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்தது.  அரசு தரப்பில் வக்கீல் ஜான்சி ஆஜரானார். விசாரணை முடிவில் நாகராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 55 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா  தீர்ப்பளித்தார்.



 

வரதட்சனை வழக்கு விசாரணையை மாற்றக்கோரிய வழக்கு - உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றம்  

 

தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த ஹர்ஷிலா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "எனக்கும், கூடலூரைச் சேர்ந்த ஏங்கல்ஸ் என்பவருக்கும் கடந்த 2019ல் திருமணம் நடந்தது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு முன்னதாக ஏங்கல்ஸ் வனத்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுவதாகவும், 5 மாவட்ட வனப்பகுதிக்கு உதவி வன உயிரியல் அலுவலராகவும் பணியாற்றுவதாக பொய் சொல்லி 100 பவுன் தங்க நகைகள், மற்றும் கார் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கேட்டுள்ளனர். ஆனால், என் பெற்றோர் 65 பவுன் நகைகளும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் கொடுத்துள்ளனர்.



 

திருமணத்திற்கு பிறகு பைலட் பயிற்சி முடித்துள்ளதாகவும் ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிபேட் தளம் அமைப்பதற்காக மேலும் 50 பவுன் நகையும், ரூ.10 லட்சமும் வாங்கித் தருமாறு கூறி என்னை அடிக்கடி சித்ரவதை செய்தார். இது குறித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒரு தலைபட்சமாக விசாரிக்கின்றனர். தொடர்ந்து விசாரித்தால் விசாரணை முறையாக நடக்காது. எனவே, இந்த வழக்கின் விசாரணையை தேனி அனைத்து மகளிர் போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த மனுவை நீதிபதி இளந்திரையன், "மனுதாரர் தரப்பில், வழக்கில் தொடர்புடையவர்களின் முன்ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடியானது. அப்போது தங்க நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை நிறைவேற்ற உத்தமபாளையம் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, இந்த வழக்கின் விசாரணை உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றப்படுகிறது. தேனி போலீசார் 12 வாரத்திற்குள் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

 



உறவினர்களுக்கு இடையேயான நடைபாதை பிரச்சனை, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள்  பொதுநல வழக்குகளாக தாக்கல் செய்யப்படுவது ஏற்புடையதல்ல - மதுரை உயர்நீதிமன்றம் 

 

மதுரை  சீலநாயக்கன்பட்டி கிராம கண்மாய் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி,  அந்த பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.   இந்த பொது நல மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய்  , கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது, கிராமங்களில் உறவினர்களுக்கு இடையே ஏற்படும் நடைபாதை பிரச்சனை, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளாக தாக்கல் செய்யப்படுகின்றன. இது போன்ற வழக்குகள் உரிமையியல் நீதிமன்றங்களில் தான் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்ககாக தாக்கல் செய்யப்படுகிறது. இது ஏற்புடையது அல்ல. கிராமங்களில் ஆக்கிரமிப்பு உள்ளது, என்றால் முதலில் தாசில்தாரிடம் மனு கொடுக்க வேண்டும். அதன் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும். அதன்பின்னரே நீதிமன்றத்தை அணுக வேண்டும் என கருத்து தெரிவித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.