மதுரையில் ”வா மீட் பண்ணுவோம்” போன் காலை நம்பி வீட்டிலிருந்து சென்ற இளைஞர் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கொலை செய்ய முயற்சி
மதுரை மாவட்டம் கள்ளந்திரி அருகே உள்ள மேல கள்ளந்திரி பகுதியைச் சேர்ந்தவர் சுதா - கண்ணன் தம்பதியினரின் மூத்த மகனான செல்லப்பாண்டி என்பவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக செல்லப்பாண்டி ஆட்டோ ஒன்று வாங்குவதற்காக சிலரிடம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் பணம் வாங்கிய நபர்கள் ஆட்டோ வாங்கி கொடுக்காமல் பணத்தை திரும்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துவந்துள்ளது. இதனிடையே கடந்த 10 தினங்களுக்கு முன்பாக செல்லப்பாண்டி தனது தாயாரிடம் சிலர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறியிருக்கிறார்.
கடைக்குள் விரட்டி விரட்டி கொலை
இந்நிலையில் நேற்று இரவு வீட்டிலிருந்த செல்ல பாண்டியை தொலைபேசி மூலமாக சிலர் அழைத்ததின் பெயரில் அழகர்கோவில் சாலைக்கு சென்றுள்ளார். அப்போது செல்லபாண்டியை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலானது திடீரென ஓட, ஓட விரட்டி அரிவாள், கத்தி, வாள் ஆகிய ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். அப்போது அந்த பகுதியில் இருந்த மளிகை கடைக்குள் ஒன்றுக்குள் உயிர் தப்பிப்பதற்காக சென்ற செல்ல பாண்டியனை கடைக்குள் வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பன்திருப்பதி காவல்துறையினர் செல்லப்பாண்டியின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.
கொடுக்கல் வாங்கல் பிரச்னையா?
பின்னர் இது குறித்து அப்பன் திருப்பதி காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே செல்லப்பாண்டியின் தாயார் சுதா தனது மகனை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்தால் மட்டும் தான் உடலை வாங்குவோம் என கூறியுள்ளார். செல்லப்பாண்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதற்கட்டமாக பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை, என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் வேறு ஏதும் காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தான தீவிர விசாரணையிலும் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.