மதுரையில் ஒரே கையால் தட்டச்சு செய்து அசத்தும் இளம்பெண்.. கின்னஸ் செய்து காட்டுவேன் என நம்பிக்கை !
அரசு தட்டச்சுக்கு முன்னுரிமை அளிப்பதை போன்று தட்டச்சில் தனித்திறன் கொண்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் பட்சத்தில், மேலும் பல மாற்றுத்திறனாளிகள் சாதிக்க உதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

உசிலம்பட்டி அருகே ஒரே கையால் தட்டச்சு செய்து - சாதிக்க உடல் குறை ஒரு தடையில்லை என நிரூபித்து காட்டி வரும் பட்டதாரி இளம்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இடது கை சிறுவயதில் ஏற்பட்ட விபத்து காரணமாக செயல் இழந்துவிட்டது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை - மள்ளபுரத்தைச் சேர்ந்தவர் அபிதா, பட்டதாரி இளம்பெண்ணான இவரது இடது கை சிறுவயதில் ஏற்பட்ட விபத்து காரணமாக செயல் இழந்துவிட்டது. தற்போது அரசு தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வரும் அபிதாவிற்கு அரசு தேர்வுகளில் தட்டச்சுக்கு முன்னுரிமை அளித்து வருவதை அறிந்த அபிதா தானும் தட்டச்சு பயிற்சி பெற எழுமலையில் உள்ள தட்டச்சு பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயிற்சியாளரின் ஊக்கத்துடன் கடந்த 6 மாதமாக தனது ஒரு கையாலேயே தட்டச்சு பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற தட்டச்சு தேர்வில் ஆங்கில தட்டச்சு பிரிவில் கலந்து கொண்ட அபிதா, இரு கைகளில் தட்டச்சு செய்பவர்கள் 10 நிமிடத்தில் தட்டச்சு செய்யும் பட்சத்தில் அபிதா 8.50 நிமிடத்தில் தட்டச்சு செய்து சாதனை படைத்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழிலும் வேகமாக தட்டச்சு செய்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சி
மேலும் ஒரு கையாலேயே தமிழ் தட்டச்சும் கற்க உள்ளதாகவும், தமிழிலும் வேகமாக தட்டச்சு செய்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சி எடுத்து வருவதாகவும்., மாற்றுத்திறனாளி என முடங்கி போகாமல் முயற்சி செய்தால் சாதிக்கலாம் என மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக பெருமிதத்துடன் தெரிவிக்கிறார். அரசு தட்டச்சுக்கு முன்னுரிமை அளிப்பதை போன்று தட்டச்சில் தனித்திறன் கொண்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் பட்சத்தில், மேலும் பல மாற்றுத்திறனாளிகள் சாதிக்க உதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.,























