வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 115 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து சற்றுமுன் கரையை கடந்தது. இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் நேற்றைய தினம் தென்தமிழக மாவட்டங்களில் அநேக  இடங்களிலும்,  வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது. மேலும் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை தென்தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை   பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதனிடையே மழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார்.   முன்னதாக மழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டது. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.










வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குறிப்பாக மதுரை மாட்டுத்தாவணி, அண்ணாநகர், தெப்பக்குளம், காமராஜர் சாலை, புதூர், திருப்பாலை ஆரப்பாளையம் பெரியார் பேருந்து நிலையம்  உள்ளிட்ட பகுதிகளிலும், அதேபோன்று புறநகர் பகுதிகளான அழகர் கோயில், அப்பன் திருப்பதி, சிலைமான், அவனியாபுரம், விமான நிலையம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மதுரையின் பல்வேறு இடங்களில் பெய்த லேசான மழையால் குளிர்ச்சி நிலவியதோடு, பொதுமக்கள் குடைபிடித்தவாறே சாலைகளில் நடந்து சென்றனர்.




 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண