அம்மா மாதிரி இருந்த சென்டிமென்ட் பைக் -  5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பைக்கிற்காக 10 ஆயிரம் சன்மானம் என 5 ஆயிரம் ரூபாய் செலவு செய்து மதுரை முழுவதும் நோட்டீஸ் ஒட்டியும் கண்ணீர் மல்க ஆடியோ வெளியிட்டும் பைக்கை தேடும் மாநகராட்சி பணியாளர்.


தாய் வாங்கிக் கொடுத்த பைக்


மதுரை மாநகர் காளவாசல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது தந்தை வேல்முருகன் உயிரிழந்த நிலையில், அவரது வாரிசுப் பணி கிடைத்துள்ளது. பின்னர் மாநகராட்சி அலுவலகத்திற்கு தனது மகன் நடந்துசென்றதை பார்த்த கார்த்திகேயனின் தாயார் கருப்பாயி சீட்டு கட்டி கடந்த 2002 ஆம் ஆண்டு பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து கடந்த 22 ஆண்டுகளாக கார்த்திகேயன் தாயாரின் நினைவாக அந்த பைக்கை பயன்படுத்திவருகிறார். இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு தாயார் கருப்பாயி கொரானா காலகட்டத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் தனது தாய் கருப்பாயி மறைந்த நிலையில் அவரின் நினைவாக அவர் வாங்கி கொடுத்த பைக்கை தினசரி பார்த்து நினைவு கூர்ந்து வந்துள்ளார்.


சி.சி.டி.வி அடிப்படையில் விசாரணை


இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி மதுரை பைபாஸ் சாலை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தனது உறவினரை பார்க்க சென்றபோது பைக்கை நிறுத்தி சென்றுவிட்டு பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது காணாமல் போயுள்ளது. இதனை பார்த்து  கார்த்திகேயன் அதிர்ச்சியடைந்து கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இதனையடுத்து எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்கு சென்ற கார்த்திகேயன் பைக் காணவில்லை என கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் மூலம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் தேடிவருகின்றனர்.


பைக் கிடைக்க நோட்டீஸ் ஒட்டியுள்ளார்


தொலைந்துபோன கார்த்திகேயனின் பைக் 22 ஆண்டுகள் ஆன நிலையில் வெறும் 5 ஆயிரம் ரூபாய்  மட்டுமே அதன் மார்க்கெட் மதிப்பு இருக்கும். ஆனாலும் தனது தாயின் நினைவாக தாயைபோன்று வைத்திருந்த பைக் காணாமல் போனதால் மனமுடைந்த கார்த்திகேயன் 5ஆயிரம் ரூபாய் செலவுசெய்து மதுரை மாநகர் முழுவதும் பைக்கின் புகைப்படத்துடன் நோட்டீஸ் ஒட்டி பைக்கை கண்டுபிடித்து கொடுத்தால் 10ஆயிரம் சன்மானமும் தரப்படும் என தொடர்பு எண்ணுடன் ஒட்டியுள்ளார். 


தீபாவளி டிரஸ், ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு


இதுதொடர்பாக பேசிய கார்த்திகேயன்...,”எனது அம்மா எனக்கு மிகுந்த கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த பைக். அம்மா இறந்து 3 வருடமான நிலையில், எனது பைக் என்னுடன் இருப்பது எனது அம்மா எனக்கு துணையாக இருப்பது போல உணர்ந்தேன். இந்த நிலையில் பைக் காணாமல் போனதால் எனது அம்மாவை இழந்தது போல கவலையில் உள்ளேன். எனது பைக்கை கண்டுபிடித்துக் கொடுத்தால் 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் தருகிறேன். எனவும் ஒருவேளை எனது பைக்கை திருடிய நபர்  எனக்கு போன் செய்து என்னிடம் என் பைக்கை கொடுத்து விட்டால் திருடியவருக்கு பத்தாயிரம் ரூபாய் சன்மானமும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தீபாவளிக்காக டிரஸ் எடுத்துக் கொடுத்து, பட்டாசு ஸ்வீட் வாங்கி கொடுப்பேன்” என கண்ணீர் மல்க ஆடியோ வெளியிட்டு தெரிவித்தார். தாய் வாங்கி கொடுத்த பைக், தாயாக இருப்பதால் பைக்கை தொலைத்து தவித்து வரும் மாநகராட்சி பணியாளரின் பைக் கிடைத்து விடும் என நோட்டீஸை பார்க்கும் ஒவ்வொருவரும் அவருக்கு போன் செய்து ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.


- திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு, கடவுளோடு விளையாடுகிறார் - மதுரையில் ரோஜா பேட்டி !