மதுரை ஜல்லிக்கட்டு போராட்டம்:

’2017-ஜல்லிக்கட்டு போராட்டத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அலங்காநல்லூரில் ஆரம்பத்தித்த போராட்ட பொறி தீயாக பரவி தமுக்கம், மெரினா என பல்வேறு இடங்களிலும் காட்டுத்தீயாக மாறியது. இந்த போராட்டத்திற்கு மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தது. பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், மண்ணையும், நமது நாட்டு இனங்களையும் காப்பாற்ற வேண்டும் என எண்ணம் பரவ ஆரம்பித்தது.
 
இதன் தொடர்ச்சியாக இயற்கையை காப்பாற்றவேண்டும், இயற்கை விவசாயத்தை கையில் எடுக்க வேண்டும், நல்ல உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என உலகம் லேசாக திரும்ப ஆரம்பித்தது. முழுமையான வெற்றியடையவில்லை என்றாலும், அதன் பயணம் சென்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தன்னால் முடிந்த மாற்றத்தை சொல்லில் மட்டும் இல்லாமல், செயலிலும் நிகழ்த்திக் காட்டியுள்ளார் அலங்கை பொன்.குமார்.

 

வெற்றிபெறும் காளைக்கு பரிசு:

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் சேர்ந்த பொன்.குமார் இயற்கை ஆர்வலர். மதுரை மாவட்டம் முழுவதும் பல்வேறு களப்பணிகளை செய்துள்ளார். ஏப்ரல் மாதங்களில்  ஏப்ரல் ஃபூல் இல்லை ஏப்ரல் கூல் என மாற்றி ஏப்ரல் மாதத்தில் ஆயிரக்கணக்கான மரங்களை நடவு செய்து வருகிறது. மியா வாக்கி முறை, நாட்டு மரங்கள் நடவு என இயற்கை மீதான அவரது காதல் நீண்டது. ஜல்லிக்கட்டு மீதும், நாட்டு இன மாடுகள் மீது கொண்ட விழிப்புணர்வு காரணமாக பிரசித்திபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் காளைகளுக்கு பசுவும், கன்றும் வழங்கி வருகிறார். இந்தாண்டு 2025-ஆம் ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டில் 6-வது முறையாக காங்கேயம் நாட்டின பசுவும், கன்று வழங்க உள்ளார். தொடர்ந்து 6-வது முறை ஏ2 ரக பால் கொடுக்கும் பசுவும் கன்று கொடுப்பது வரவேற்பை பெற்று வருகிறது.

நாட்டினங்களை காப்பாற்ற முயற்சி:

இது குறித்து பொன்.குமார் நம்மிடம் பேசுகையில்...," காங்கேயம், உம்பளச்சேரி, தேனி மலைமாடு, புலிக்குளம், ஆலம்பாடி, பர்கூர் என பல்வேறு வகையான நாட்டின மாடுகள் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட அளவிற்கு மட்டும்தான் தற்போது இந்த நாட்டு இனங்கள் உள்ளது. பல நாட்டின இனங்கள் அழிந்து வருகிறது. அதன் பெயர்கள் கூட வெளியில் தெரியவில்லை.

இதனை நாம் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனால் இப்போது தொடர்ந்து நாட்டு இன பசுவும், கன்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு வழங்கி வருகிறேன். பாலமேடு மஞ்சமலைசாமி முன்னிலையில் நடத்தப்படும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் கிராம கமிட்டி தொடர்ந்து எனக்கு இந்த வாய்ப்பை வழங்கி வருகிறார்கள். இதனால் நான் ஆண்டுதோறும் இதனை செய்து வருகிறேன். ஜல்லிக்கட்டுகளில் கார், பைக் கொடுப்பதை காட்டிலும் இதுபோன்ற நாட்டினத்தை மீட்டெடுக்கும் முயற்சி செய்வது, ஆரோக்கியமான சமுதாயமாக மாறும் என நம்புகிறேன்.

முழுமையான வெற்றி:

அதனால் என்னால் முடிந்த இந்த சிறு முயற்சியை செய்து வருகிறேன். தற்போது கொடுக்கவுள்ள பசு காங்கேயம் கருக்காய் மயிலை பசுவாகும். இந்த பசுவிற்கு நான்கு பற்கள் உள்ளது. இதனுடன் செவலை கன்றையும் கொடுக்கவுள்ளேன். ஏற்கனவே நான் கொடுத்த காங்கேயம் பசுக்கள் திண்டுக்கல், வேலூர், கோட்டூர் என பல இடங்களில் நல்ல முறையில் பாதுகாக்கப்படுகிறது. உரிமையாளர்கள் என்னுடன் ஒரு உறவினர்கள் போல இருந்து வருகிறார்கள்.
 
 
தொடர்ந்து அந்த பசுக்களும் கன்றுகளும் எப்படி இருக்கிறது, என்பதை கண்காணிக்கிறேன். என்னுடைய முன்னெடுப்பு வெற்றிக்கரமாக சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து இந்த முயற்சியை பலரும் செய்ய வேண்டும் என்பதுதான் என்னோட விருப்பம். அதுதான் ஒரு முழுமையான வெற்றியை கொடுக்கும்” என தெரிவித்தார்.