மதுரை ஒத்தக்கடை பகுதியில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார்களை கற்களால் தாக்கி நொறுக்கிய போதை கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது இதுதொடர்பாக மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கார் முன் கண்ணாடி, கதவுகள் மற்றும் கார் முழுவதும் ஆங்காங்கே சேதமடைந்து
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள நரசிங்கம் அம்மச்சியம்மன் நகர் பகுதியில் வசித்துவரும் அருள்தாஸ், வினோத், பாஸ்கர் மற்றும் முத்து என்பவர்களது வீட்டு வாசல் முன்பாக கடந்த 13 ஆம் தேதி இரவு வழக்கம் போல கார்களை நிறுத்தி விட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது கார் முன் கண்ணாடி, கதவுகள் மற்றும் கார் முழுவதும் ஆங்காங்கே சேதமடைந்து கற்கள் கிடந்துள்ளதை கண்டு காரின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்த சிசிடிவி கேமிராவை பார்த்தபோது 3 இளைஞர்கள் கொண்ட போதை கும்பலானது வீட்டு வாசல் முன்பாக நிறுத்தியிருந்த 4 கார்களை திடீரென கற்களால் அடித்து நொறுக்குகின்றனர். அதில் அருகேயுள்ள கற்களை எடுத்து கண்ணாடியை உடைத்து நொறுக்கியதோடு, போதையில் கைகளால் கார் கண்ணாடியை குத்தி உடைக்கின்றனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்ததை அறிந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
கார்களை அடித்து நொறுக்கினர்
இதுகுறித்து ஒத்தக்கடை காவல்துறையினருக்கு அருள்தாஸ் உள்ளிட்ட மூன்று நபர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த கார்களை அடித்து நொறுக்கிய மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ சஞ்சய் (வயது 19), முத்துப்பாண்டி (வயது 18), மங்களகுடி பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாண்டியன் (வயது 19), ஆகியோரை ஒத்தக்கடை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்
இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, நாள்தோறும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடமாடுவதாகவும் புகார் வாசிக்கப்பட்டது. அதே போல் வீட்டு வாசல்களில் நிறுத்தக்கூடிய கார் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்குவதோடு, இரவு நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லக் கூடியவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக ஒத்தக்கடை சுற்றுவட்டார பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். எனவே, காவல்துறையினர் போதைப்பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு சுற்றி திரியும் போதை கும்பலை கைது செய்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்துள்ளனர்