2024 ம் ஆண்டில் மட்டும், இறந்த பிறகு உறுப்பு தானம் செய்த தானமளித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 268 ஆக இருக்கிறது - மருத்துவர் சொல்லும் விவரம்.
உறுப்பு மாற்று சிகிச்சை
”இந்தியாவில் உறுப்பு தான விகிதம் 10 இலட்சம் மக்களுக்கு ஏறக்குறைய ஒரு தானமளிப்பவர் என்ற அளவில் மிகவும் குறைவாக இருப்பதால், உறுப்புகளின் தேவைக்கும் கிடைப்பதற்கும் இடையிலான இடைவெளி மிகப்பெரியதாக உள்ளது. இந்தச் சூழலில், உயிருடன் இருப்பவர்கள் மற்றும் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து பெறப்படும் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மேம்பட்ட உறுப்பு மாற்று சிகிச்சை நுட்பங்களைக் கையாள்வதும் மேலும் பல உயிர்களைக் காப்பாற்றுவதற்கு முக்கியமாகும்" என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிபுணர்கள் தெரிவித்தனர். உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மருத்துவ நிபுணர்கள் இது தொடர்பான விரிவான தகவல்களை வழங்கினர்.
உறுப்பு தானம் குறித்த கல்வியை பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்
சிறுநீரகவியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் K. சம்பத் குமார் பேசுகையில், “உறுப்பு தானம் என்பது உயிர் காக்கும் ஒரு நடவடிக்கையாகும். நம் நாட்டில், அதிக மக்கள் தொகை இருந்தபோதிலும், உறுப்பு தான விகிதம் பத்து இலட்சம் பேருக்கு ஒன்றுக்கும் குறைவாகவே உள்ளது. மூளைச்சாவு பற்றிய பொதுமக்களின் புரிதலின்மை, கலாச்சார நம்பிக்கைகள், மத ரீதியான தவறான கருத்துக்கள் மற்றும் உணர்வு ரீதியான தயக்கம் ஆகியவை அந்த நெருக்கடியான, துயரமான தருணங்களில் உறுப்புதானம் செய்வது குறித்து தைரியத்துடன் முடிவெடுப்பதற்குத் தடையாக உள்ளன. நாம், உறுப்பு தானம் குறித்த கல்வியை பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்; மற்றும் சமூக சுகாதாரத் திட்டங்களில் அவற்றை ஒருங்கிணைக்க வேண்டும்.” என்றார்.
உறுப்புமாற்று சிகிச்சை செய்வதில் நம் நாட்டிற்கே தமிழகம் வழிகாட்டுகிறது
இரைப்பை குடலியல் மருத்துவ மற்றும் அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் ஸ்ரீனிவாசன் ராமச்சந்திரன் பேசுகையில், “நீண்ட காலமாக மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து தானமாகப் பெற்று செய்யப்படும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு நீண்ட காலமாக ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது என்பது ஊக்கமளிக்கும் செய்தியாகும். ஒழுங்கமைக்கப்பட்ட இறந்தவர்களிடமிருந்து பெறப்படும் உறுப்பு தான திட்டத்தை தமிழகம்தான் இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தியது. தற்போது இறந்தவர்களிடமிருந்து உறுப்பு தானம் பெற்று உறுப்புமாற்று சிகிச்சை செய்வதில் நம் நாட்டிற்கே தமிழகம் வழிகாட்டுகிறது. 2024 ம் ஆண்டில் மட்டும், இறந்த பிறகு உறுப்பு தானம் செய்த தானமளித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 268 ஆக இருக்கிறது. இந்தியாவில் பிற மாநிலங்களின் சராசரியை விட இது மிக அதிகம். இது நாட்டின் உறுப்பு மாற்று இயக்க வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாகும். இந்த சாதனை அளவானது, TRANSTAN (தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம்), மருத்துவமனைகள் மற்றும் உறுப்பு தானம் மூலம் பிறரின் உயிரைக் காப்பாற்ற முடிவெடுத்த குடும்பங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாகும்.” என்றார்.