இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் 18- ஆம் தேதி டெல்லியிலிருந்து விமானப்படை விமானம் மூலம் பகல் 11.00 மணியளவில் மதுரை வருகிறார். பின்னர் கார் மூலம் மீனாட்சி அம்மன் கோயில் சென்று சாமி தரிசனம் முடித்து மீண்டும் விமான நிலையம் வந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை செல்கிறார். குடியரசுத்தலைவர் மதுரை வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை விமானநிலைய இயக்குநர் பொறுப்பு கணேசன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் மதுரை மாநகர் துணை காவல் ஆணையர் சாய் பிரணித் மற்றும் மதுரை காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் யாதவ், புலானாய்வு மற்றும் பாதுகாப்பு அலுவலர் சுவாமிநாதன், வருவாயத்துறை சார்பில் திருமங்கலம் வருவாய் கோட்ட அலுவலர் ( RDO) கோட்டைச்சாமி, சுகாதார துறை சார்பில் மண்டல இணை இயக்குநர் அர்ஜுன்குமார், மருத்துவ அலுவர் தனசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் விமான நிலைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் குடியரசு தலைவர் வருகையையொட்டி மதுரை வில்லாபுரத்தில் மரங்களை வெட்டிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருவதை முன்னிட்டு மதுரை முழுவதும் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை விமான நிலையத்திலிருந்து அவனியாபுரம் மற்றும் வில்லாபுரத்தில் இருந்து மீனாட்சி அம்மன் கோயில் நோக்கி செல்லும் சாலையில் வழியில் இடையூறாக இருக்கும் மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது அதை அப்புறப்படுத்தக்கூடாது என தடுத்து நிறுத்தினர். மேலும் குடியரசுத் தலைவரின் ஒரு நாள் வருகைக்காக பல வருடங்களாக இருந்து வந்த மரங்களை வெட்டுவது என்பது கேளிக்கையாக உள்ளது என்றும் இது சமந்தமாக மாநகராட்சி அதிகாரிகளிடம் மரம் வெட்டுவதற்கு உண்டான ஒப்புதல் ஆவணங்கள் உள்ளதா என மாநகராட்சி அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் இப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்