திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள டாக்டர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இதற்கிடையே, கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் அமலாக்கத்துறை அதிகாரியாக அங்கிட் திவாரி பணியில் சேர்ந்தார். 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இச்சூழலில், டாக்டர் சுரேஷ் பாபு மீதான வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் இதிலிருந்து அவரை காப்பாற்றுவதாகவும் கூறி மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் அங்கிட் திவாரி. இதற்கு டாக்டர் சம்மதிக்காததால் கடைசியில் ரூ.51 லட்சம் என பேரம் பேசி முடிக்கப்பட்டது. அதில் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாயை முதல் கட்டமாக திண்டுக்கலில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் காரில் வைத்து கொடுத்தார். மீதித் தொகையை  டாக்டரிடம் வாட்ஸ் அப் கால் மூலம் கேட்டுள்ளார். இப்படிப்பட்ட சூழலில், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி திண்டுக்கல்லில் உள்ள மதுரை புறவழிச் சாலையில் அதிகாரியின் காரில் 20 லட்சம் ரூபாயை வைத்தனர். அந்த காரை எடுத்து அவர் செல்ல முயன்ற போது அவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால், அவர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார்.



பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கொடைரோட்டில் உள்ள டோல்கேட்டிற்கு தகவல் தெரிவித்து அந்த காரை மடக்கி பிடித்து அவரை திண்டுக்கல் அலுவலகத்திற்கு அழைத்து வந்து கைது செய்து, வரிடம் இருந்து 20 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி பின் சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்பு அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கிட் திவாரியின் வீட்டில் சோதனை நடத்தி ஆவணங்கள் மடிக்கணினி உள்ளிட்ட முக்கிய பொருட்களை கைப்பற்றினர். 





 

இந்நிலையில், மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர் பிரிஜிஷ்ட் பெனிவால், தமிழக டிஜிபிக்கு அனுப்பிய புகாரில், ‘மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்குள் 40 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை என்று கூறி அத்துமீறி நுழைந்தவர்கள் மீதும், தேவையின்றி ஆவணங்களை திருடி சென்றவர்கள் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.  



 

அதன்படி, அமலாக்க பிரிவு அளித்த புகார் மீது விசாரணை நடத்தும்படி டிஜிபி அலுவலகத்தில் இருந்து மதுரை மாநகர் காவல் ஆணையாளருக்கு இதுகுறித்து விசாரணை நடத்தி அனுப்பி வைக்க உத்தரவிட்டதை அடுத்து  தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்திற்கு கடந்த வாரம் காவல்துறை நேரடியாக சம்மன் கொண்டு சென்றதுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வாங்க மறுத்தாக கூறப்படுகிறது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் டிசம்பர் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜாரகும்படி தபால் மூலம் இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக இன்று மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகாததால் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து அடுத்த சமன் அனுப்பப்பட உள்ளதாக தல்லாகுளம் காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.