மதுரை அவனியாபுரம் பகுதியில் 4-ஆம் வகுப்பு மாணவன், ஒரு மாதத்தில் 200-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து அசத்தல் - சிறுவனுக்கு குவியும் பாராட்டு


இந்திய செஸ் வீரர் பிரக்கியானந்தா, அரசியல் தலைவர்கள், முன்னோர்கள் மற்றும் குழந்தைகள், கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் ஆகியவற்றின் உருவப்படங்களை வரைந்துள்ளார். 


மதுரை மாநகர் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் - தமிழரசி தம்பதியின் மூத்த மகன் மகிழன் இவர் 4-ம் வகுப்பை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பயின்று வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாகவே ஓவியத்தின் மீது அதிக விருப்பம் கொண்ட மகிழனுக்கு, வெளியில் சென்று நேரத்தை வீணடிக்க விரும்பாமல் வீட்டினுள் தினமும் ஒரு பேப்பர் பென்சிலை எடுத்துக்கொண்டு, அவ்வப்போது தான் நினைக்கும் உருவங்களை வரைந்து வந்துள்ளார்.






தொடர்ந்து இது தொடர்கதையாகி நாள்தோறும் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்தவுடன் வீட்டினுள் நடிகர், நடிகைகள் மற்றும் இந்திய செஸ் வீரர் பிரக்யானந்தா, அரசியல் தலைவர்கள், முன்னோர்கள் மற்றும் குழந்தைகள், கார்ட்டூன் காதபத்திரங்கள் ஆகியவற்றின் உருவப்படங்களை வரைந்துள்ளார். 




வரைந்து வைத்துள்ள படங்களுக்கு வர்ணம் தீட்டி மெருகூட்டி வருவதால் வரும் காலங்களில் மிகப்பெரிய ஓவியராக வேண்டும் என்பது தான் தனது லட்சியம் என மகிழன் கூறுகிறார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 200 ஓவியங்களை வரைந்து அசத்தியதாக பெற்றோர் தெரிவித்தனர். இவரது தாய் தமிழரசி தனது மகன் சிறு வயதிலேயே ஓவியத்தின் மீது அதிக பற்று உள்ளதால், மிகப்பெரிய ஓவியராக வளர வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். நான்காம் வகுப்பு பயிலும் மாணவன், தனது சிறு வயதிலேயே தனது திறமையை வளர்த்துக் கொண்டு ஓவியங்களை வரைந்து அசத்தும் நிகழ்வு அப்பகுதியில் உள்ளவர்கள் சிறுவனை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


குழந்தைகள் கையில் செல்போன்கள் தான் அதிகமாக ஆக்கிரமிப்பு செய்கிறது. இதனை மாற்றி ஓவியங்கள், விளையாட்டு என மற்ற விசயங்களில் கவனம் செலுத்துவது அவசியமாக ஒன்று என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு