மதுரையில் நவராத்திரி கொலு படிகள் ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப் படை வரிசையில் அமைக்கப்பட்டு அதில் நேர்த்தியாக கொலு பொம்மைகள் அடுக்கி வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
நேர்த்தியாக கொலு பொம்மைகள் அடுக்கப்பட்டுள்ளன
நவராத்திரி விழா தொடங்கிய நிலையில் இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைத்து நேற்று வழிபடத் தொடங்கினர். செப்டம்பர் 30 துர்காஷ்டமி, அக்டோபர் 01 சரஸ்வதி பூஜை, அக்டோபர் 02 ம் தேதி அன்று விஜயதசமி நிகழ்வோடு நவராத்திரி விழா முடிவடைகிறது. இந்த நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மன் கோயில்களில் நவராத்திரி கொலு படிகள் ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப் படை வரிசையில் அமைக்கப்பட்டு அதில் நேர்த்தியாக கொலு பொம்மைகள் அடுக்கப்பட்டுள்ளன.
ஜீவராசிகளின் பொம்மைகள் வைக்கப்பட்டன.
முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைத்துள்ளனர். இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின் பொம்மைகள், சிப்பி, சங்கு போன்றவற்றை இடம் பெறச் செய்தனர். மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைத்தனர். நான்காவது படியில் நான்கு அறிவுகொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகள் வைக்கப்பட்டன.
நடுநாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியும்
ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகள், ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகள், ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகள் இடம்பெறச் செய்தனர். எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைத்தனர். ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள், அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர். இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபடுகின்றனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
படிப்படியாக முன்னேறப் படிகளிலே கொலு வைத்து பக்தர்கள் வழிபட வேண்டும் என்பது ஐதீகம். மதுரை மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் நவராத்திரி விழா களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஊமச்சிகுளம் அருகேயுள்ள சாஸ்திரி நகரில், கொலு பொம்மைகள் வைத்து நேற்று முதல்நாள், அம்மனுக்கும் கொலு பொம்மைகளுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பஜனைகள் பாடி நவராத்திரி முதல் நாள் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடினார்கள். இதில் கிராமத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு தீபாராதனைகள் காண்பித்து மனமுருக வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.